வருவாயை பிரித்து கொள்ள கூட்டம் நடத்தும் கனிம வளத்துறை அதிகாரிகள் - ஐகோர்ட் கண்டனம்
- தவறான நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்கு போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது.
- திண்டுக்கல் மட்டுமல்லாமல் தமிழகத்தில் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மதுரை:
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
நான் மாற்றுத்திறனாளி. 2018-ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்ட சுரங்கத்துறையின் மாவட்ட கனிம நிதி அறக்கட்டளையில் கணக்காளராக பணியில் சேர்ந்தேன். 2022-ம் ஆண்டில் மாரியம்மாள் என்பவர் இந்த துறையின் உதவி இயக்குனர் பொறுப்பு பணியை ஏற்றார். அவர் தற்காலிக பணியில் இருந்த என்னை நீக்கி விட்டார். பின்னர் அவருக்கு உதவியாளராக மட்டும் வேலை செய்யும்படியும், அதற்கான ஊதியம் தருவதாகவும் உறுதி அளித்தார்.
அதன்பேரில் வேலை செய்தபோது, குவாரி உரிமையாளர்கள் எனது வங்கி கணக்கில் செலுத்தும் லஞ்சப்பணத்தை வாரத்துக்கு ஒருமுறை எடுத்து உதவி இயக்குனர் மாரியம்மாளிடம் ஒப்படைத்து விடுவேன். திடீரென பல்வேறு முறைகேட்டுக்கு நான் தான் காரணம் என மாரியம்மாள் கூறினார்.
இதனால் அவரது தூண்டுதலின்பேரில் குவாரி உரிமையாளர்கள் கொடுத்த லஞ்சப்பணத்தை என்னிடம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். இதனால் நானும், எனது தாயாரும் 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளோம். எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு உள்ளது.
எனவே குவாரி உரிமையாளர்களிடம் இருந்து மாரியம்மாள் லஞ்சப்பணத்தை வங்கிக்கணக்கு மூலமாக பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன. எனவே எனக்கும், என் தாயாருக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படியும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர் உள் நோக்கத்துடன் இந்த வழக்கை தாக்கல் செய்து உள்ளார். தனிப்பட்ட முறையில் குவாரி உரிமையாளர்களிடம் இருந்தும் மனுதாரர் ஆதாயம் அடைந்துள்ளார். எனவே இந்த வழக்கு ஆவணங்கள் அனைத்தும் புனையப்பட்டவை என்பதால் இதனை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும் என வாதாடினார்.
பின்னர் மனுதாரர் வக்கீல் ஆஜராகி, கனிமவள அதிகாரி உதவி இயக்குனர் மாரியம்மாள் லஞ்ச வழக்கில் சிக்கி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட 3 மாதத்தில் மீண்டும் அதே பணியிடத்தில் நியமிக்கப்பட்டார். அவர் பல்வேறு குவாரி உரிமையாளர்களிடம் இருந்து ஏராளமான தொகையை லஞ்சமாக பெற்றதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளன.
தற்போது அவர் தேனி மாவட்டத்தில் பணியில் இருப்பதால் இந்த மாவட்டத்தில் இருந்து சுமார் ரூ.2,000 கோடி மதிப்புள்ள கனிம வளங்கள் கேரளாவுக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளன. எனவே இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றார்.
இதையடுத்து நீதிபதி, கனிம வள அதிகாரிகள் கூட்டம் நடத்துவதே ஒவ்வொரு மாதமும் எவ்வளவு வருமானம் வருகிறது? அதை எப்படி பிரித்துக் கொள்வது என்பதற்காகத் தான். தவறான நடவடிக்கையின் காரணமாக அதிகாரிகளும், குவாரி உரிமையாளர்களும் அரசுக்கு சேர வேண்டிய வருவாயை பங்கு போட்டுக் கொள்ளும் நிலை உள்ளது. திண்டுக்கல் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.
மனுதாரர் வங்கி கணக்கில் குவாரி உரிமையாளர்கள் எதற்காக பணம் செலுத்தினார்கள்? அவர் பணம் செலுத்தியிருந்தால் இதன் மூலம் யார் ஆதாயம் அடைந்தார்கள்? என்று சம்பந்தப்பட்ட அம்பாத்துரை போலீஸ் இன்ஸ்பெக்டர் விரிவாகவும், நேர்மையாகவும் விசாரித்து இந்த கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தவறும் பட்சத்தில் இந்த விவகாரத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற நேரிடும். நேர்மையாக இந்த வழக்கை விசாரித்தால் இந்த துறையில் நல்லது நடப்பதற்கு உதவ முடியும். அது மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் ஆயிரம் கோடி ரூபாயாவது அரசுக்கு வருவாயாக நம்மால் தேடித் தர முடியும். அதற்காக தேவைப்படும் உதவிகளை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செய்து தரவேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை வருகிற 22-ந்தேதிக்கு ஒத்தி வைத்தார்.