தமிழ்நாடு செய்திகள்

ஆசிரியர்களின் அலட்சியம்: வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்த அரசுப்பள்ளி மாணவன் படுகாயம்

Published On 2025-06-28 10:54 IST   |   Update On 2025-06-28 10:54:00 IST
  • பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர்.
  • பலத்த காயமடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை:

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் எம்.எஸ்.நகரில் வசித்து வரும் பாலாஜி என்பவரின் மகன் 8-ம் வகுப்பு படித்து வருகிறான்.

இந்த பள்ளியில் கடந்த 25-ந் தேதி வேதியியல் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது இந்த பணியில் பள்ளி மாணவ- மாணவிகளும் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அப்போது பாலாஜியின் மகனான 8-ம் வகுப்பு மாணவனும் ஆய்வகத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறான்.

அப்போது பள்ளி ஆசிரியர்கள் சிலர் ஆய்வகத்தில் இருந்த ரசாயன பாட்டில்களை சாக்கு மூட்டையில் கட்டி தனியாக கழிவறையில் வைத்திருந்தனர்.

இந்த மூட்டையை தூக்கிச் சென்று வெளியில் வைக்குமாறு 8-ம் வகுப்பு மாணவனிடம் பள்ளி ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து மாணவன் அந்த மூட்டையை தூக்கி தனது தோளில் தொங்கவிட்டபடி வெளியில் சென்றுள்ளான். தன்னால் மூட்டையை தூக்க முடியாது என்று மாணவன் தெரிவித்த போதும் ஆசிரியர்கள் சிலர் வலுக்கட்டாயமாக மூட்டையை தூக்குமாறு கூறியிருக்கிறார்கள்.

அப்போது மூட்டையில் இருந்த ரசாயன பாட்டில்கள் உடைந்துள்ளன.

இதில் மூட்டையில் இருந்த ஆசிட் பாட்டிலும் உடைந்து மாணவனின் உடலில் பின்பகுதியில் கொட்டி உள்ளது. இதனால் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு மாணவன் அலறி துடித்துள்ளான்.

பின்னர் பள்ளி வளாகத்தில் வைத்தே மாணவனின் உடலில் ஏற்பட்ட காயத்தை பள்ளி ஊழியர்கள் கழுவி உள்ளனர்.

காயம் ஏற்பட்ட இடத்தில் தேங்காய் எண்ணெயை போட்டு விட்டுள்ளனர். இது பற்றி பெற்றோருக்கு முறையாக தகவல் தெரிவிக்காமல் வீட்டுக்கு மாணவனை அனுப்பி வைத்துள்ளனர்.

இது பற்றி மாணவனின் தாய் சந்தியா சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் பள்ளி நிர்வாகத்தின் மீதும் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கிடையே பலத்த காயமடைந்த மாணவனுக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விவகாரம் பற்றி மாணவனின் பெற்றோர் கூறும்போது, எங்கள் மகனுக்கு ஏற்பட்ட இந்த நிலைமை வேறு எந்த மாணவனுக்கும் ஏற்பட்டு விடக்கூடாது. இதனை கருத்தில் கொண்டு பள்ளி ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

இதை தொடர்ந்து சேத்துப்பட்டு போலீசார் யாருடைய தவறுதலின் பேரில் மாணவனின் உடலில் ஆசிட் கொட்டி காயம் ஏற்பட்டது என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News