'1 கோடி கடன், தினமும் 3 லட்சம் வட்டி'... கடன் தொல்லையால் பழக்கடை உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை
- கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார்.
- வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மதுரை:
மதுரையை அடுத்த கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் பகுதியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடப்பதாக கருப்பாயூரணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணமாக கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில் பிணமாக கிடந்தவர் மதுரை செல்லூர் அருகே உள்ள எஸ்.ஆலங்குளம் ராமலிங்க நகரை சேர்ந்த வேலு மகன் கணேசன் (வயது 46) என்பது தெரியவந்தது. அவருக்கு திருமணமாகி மேகலா என்ற மனைவியும், 12-ம் வகுப்பு படிக்கும் மகளும், 11-ம் வகுப்பு படிக்கும் மகனும் உள்ளனர்.
இவர் சிம்மக்கல் மற்றும் மாட்டுத்தாவணி பகுதியில் பழக்கடை வைத்து நடத்தி வந்தார். பழக்கடையை நடத்துவதற்காக திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட் டியை சேர்ந்த ஒரு வியாபாரியிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக தினமும் சுமார் ரூ.3 லட்சத்துக்கும் மேல் வட்டியும் பல வருடங்களாக கட்டி வந்துள்ளார். தொடர்ந்து வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் வட்டி சரியாக கட்ட முடியாமல் பல நாட்களாக விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் கடனுக்கு ஈடாக தனது வீட்டு பத்திரத்தையும் அடமானமாக கொடுத்துள்ளார். பெரும்பாலான வட்டியை செலுத்திய நிலையில் கடன் கொடுத்தவர் அடமான பத்திரத்தை திருப்பித்தர மறுத்துவிட்டார்.
மேலும் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியாததால் அவருக்கு சொந்தமான இரண்டு கடைகளையும் எழுதிக் கொடுக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கணேசன், இன்று காலை வீட்டிலிருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு கருப்பாயூரணி அருகே உள்ள கண்மாய் அருகே சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
வாங்கிய கடனுக்காக வட்டி கட்ட முடியாமல் பழக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.