'கூகுள் பே' மூலம் சிறிய தொகையை அனுப்பி வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டும் மோசடி கும்பல்
- யு.பி.ஐ. பின் நம்பரை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரத்தை திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான்.
- மொத்த பணமும் சுருட்டப்பட்டு விடும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
இணைய தள மோசடிகள் நாடு முழுவதும் இன்று அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் அனுப்பப்பட்டு உள்ளது. நீங்கள் டிஜிட்டல் முறையில் கைது செய்யப்பட்டுள்ளீர்கள் என்பதில் தொடங்கி பல்வேறு வழிகளில் மோசடி பேர் வழிகள் இருந்த இடத்தில் இருந்து நமது வங்கி பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
அந்த வகையில் 'கூகுள் பே' மூலமாக சிறிய தொகையை அனுப்பி உங்களது பின் நம்பரை தெரிந்து கொண்டு வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் சுருட்டும் நூதன மோசடி தற்போது அரங்கேறி வருகிறது. குறிப்பிட்ட வங்கிக் கணக்குக்கு ரூ.5 ஆயிரம் பணத்தை மோசடி ஆசாமிகள் எங்கிருந்தோ உங்களுக்கு அனுப்புவார்கள்.
அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து இந்த பணம் வந்த சில நிமிடங்களிலேயே உங்களை தொடர்புக் கொண்டு பேசும் நபர் எனது செல்போனில் இருந்து உங்களுக்கு தவறாக ரூ.5 ஆயிரம் பணத்தை அனுப்பிவிட்டேன். அதனை திருப்பி அனுப்பி விடுங்கள் என்று கூறுவார். நீங்களும் அதை நம்பி அடுத்தவர் பணம் நமக்கு எதற்கு? என நினைத்து யார் என்றே தெரியாத அந்த நபரது வங்கிக் கணக்குக்கு உங்களது யு.பி.ஐ. பின் நம்பரை பயன்படுத்தி ரூ. 5 ஆயிரத்தை திருப்பி அனுப்பி விட்டீர்கள் என்றால் அவ்வளவுதான்.
இதன் பிறகு உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் சுருட்டப் பட்டிருக்கும். எதிர்முனையில் இருக்கும் நபர் உங்களது யு.பி.ஐ. பின் நம்பரை அப்படியே ஹேக் செய்து வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணத்தையும் எடுத்திருப்பார்.
இந்த மோசடியில் இருந்து தப்புவது எப்படி? என்பது பற்றி சைபர் கிரைம் போலீசார் விரிவாக விளக்கம் அளித்திருக்கிறார்கள்.
அதன் விவரம் வருமாறு:-
உங்களுக்கு சிறிய தொகையை தெரியாமல் அனுப்பி இருப்பவர் யார் என்றே தெரியாதவராக இருந்தால் நீங்கள் உடனடியாக அந்த பணத்தை திருப்பி அனுப்ப வேண்டியது இல்லை.
பணத்தை அவர் திருப்பி கேட்கும் பட்சத்தில் அதற்கு மாறாக உங்களது பின் நம்பரை மாற்றி போட்டு அவரை குழப்பம் அடைய செய்யலாம்.
இதுபோன்று தவறான பின் நம்பரை அடிப்பதன் மூலம் எதிர்முனையில் இருப்பவர் நீங்கள் அடித்திருப்பது உண்மையான பின் நம்பர் தான் என்று அவரும் உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடுவதற்கு முயற்சிப்பார்.
ஆனால், அது நடக்காது. அவரது முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்து விடும். இணைப்பு துண்டிக்கப்பட்ட பிறகு நீங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு தொடர்பு கொண்டு இது போன்று அறிமுகம் இல்லாத நபரிடம் இருந்து பணம் வந்திருப்பதாக கூறி புகார் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் அருகில் உள்ள போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளிக்கலாம். அதற்கு நேரமில்லை என்றால் 1930 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம்.
இப்படி உஷாராக நீங்கள் செயல்படாமல் அவசரப்பட்டு உண்மையான பின் நம்பரை தெரிவித்து விட்டால் அடுத்த நொடியே உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள மொத்த பணமும் சுருட்டப்பட்டு விடும் என்பதை பொதுமக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு சைபர் கிரைம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.