தமிழ்நாடு செய்திகள்

தாளவாடி அருகே யானை தாக்கி விவசாயி படுகாயம்

Published On 2025-04-24 12:18 IST   |   Update On 2025-04-24 12:18:00 IST
  • ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வெயில் வாட்டி வதைப்பதால் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் உணவுக்காகவும் குடிநீருக்காகவும் சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையோரம் வெளிவருவதும், கிராமத்துக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்துவதும் தொடர் கதையாகி வருகிறது.

சில நேரங்களில் மனித உயிருக்கும் ஆபத்தை விளை விக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இரவு நேர காவலில் இருந்த விவசாயியை தாக்கியதில் அவர் படுகாயம் அடைந்தார். இது பற்றிய விபரம் வருமாறு:- தாளவாடி அடுத்த இக்கலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு சாமி (வயது 55). விவசாயி.

இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. தற்போது தோட்டத்தில் கரும்பு பயிரிட்டுள்ளார். அவை நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இக்கலூர் கிராமம் அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி உள்ளதால் இரவு நேரத்தில் தங்களது தோட்டங்களில் விவசாயிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம்.

அதேபோல் நேற்று இரவு பிரபு சாமி தனது கரும்பு தோட்டத்தில் இரவு நேர காவலில் இருந்துள்ளார். அப்போது அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை ஒன்று இக்கலூர் கிராமத்துக்குள் புகுந்தது. பின்னர் பிரபுசாமி கரும்பு தோட்டத்திற்குள் புகுந்தது.

திடீரென யானை தோட்டத்திற்குள் வந்ததால் அதிர்ச்சியடைந்த பிரபு சாமி அங்கிருந்து தப்பி ஓடுவதற்குள் ஒற்றை யானை அவரை தாக்கியது. இதில் இரு கால்களில் பலத்த காயம் அடைந்த பிரபு சாமி வலியால் அலறினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து தோட்டத்தில் இருந்த விவசாயிகள் பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

பின்னர் யானை தாக்கி படுகாயம் அடைந்த பிரபு சாமியை மீட்டு சிகிச்சைக்காக தாளவாடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பிரபு சாமி கோவை மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News