தமிழ்நாடு செய்திகள்

விபத்து நடந்த கல்குவாரியின் நுழைவு வாயிலையும், அங்கு பூட்டி சீல் வைக்கப்பட்டு இருப்பதையும் காணலாம்.

சிவகங்கை கல்குவாரி விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு

Published On 2025-05-22 12:29 IST   |   Update On 2025-05-22 12:29:00 IST
  • பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர்.
  • தனியார் கல்குவாரி நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர்:

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மல்லாங்கோட்டையில் இயங்கி வந்த தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் பாறைகள் மற்றும் மண் சரிவால் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மண்ணில் புதைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்த நிலையில், பாறை இடுக்குகளில் சிக்கி இருந்த மற்றொருவரை நேற்று பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மீட்டனர்.

இந்நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு தொழிலாளியான தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மைக்கேல் என்பவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.4 லட்சமும், கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1.5 லட்சமும், கல்குவாரி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் என உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.10.5 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்பட்ட மேகா மெட்டல்ஸ் என்ற தனியார் கல்குவாரி நிறுவனத்தின் உரிமத்தை தற்காலிகமாக தடை செய்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் உத்தரவிட்டார்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த விபத்தையடுத்து தமிழகத்தில் இயங்கி வரும் அனைத்து கல்குவாரிகளையும் ஆய்வு செய்ய தமிழக கனிமவளத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News