ஓட்டல் சால்னாவில் செத்து மிதந்த வெட்டுக்கிளியால் பரபரப்பு- உணவகத்தை மூடி அதிரடி நடவடிக்கை
- இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார்.
- விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே ம.ரெட்டியப்பட்டி பகுதியில் பிரபல தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த இருவர் ஹோட்டலுக்கு சென்று பரோட்டா ஆர்டர் செய்த நிலையில் சால்னா ஊற்றி சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென சால்னா குழம்பில் ஏதோ மிதப்பது போல தெரியவர பரோட்டா சாப்பிட்டவர்கள் அதனை எடுத்து பார்த்த போது வெட்டுக்கிளி பூச்சியொன்று குழம்பில் செத்து மிதந்து கொண்டிருந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த இருவரும் இது குறித்து ஓட்டல் உரிமையாளரிடம் காண்பித்து நடந்ததை கூறிய போது வழக்கம் போல ஓட்டல் ஊழியர்கள் பாத்திரங்களை மூடாத காரணத்தால் ஒன்றிரண்டு பூச்சி விழுந்திருக்கலாம் எனவும் அது ஒன்றும் செய்யாது எனவும் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் கூறியுள்ளார்.
இதற்காக இருவரும் சாப்பிட்டதற்கு பணம் எதுவும் தர வேண்டாம் என கூறி உள்ளார். எனினும், இருவரும் சாப்பிட்டதற்கு பணம் செலுத்தி விட்டு ஓட்டலை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேய ஒவ்வாமை ஏற்பட்டு இருவரும் அடுத்தடுத்து வாந்தி எடுக்க ஆரம்பித்த நிலையில் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் ம.ரெட்டியாபட்டி பகுதியில் இயங்கி வரும் தனியார் ஓட்டல் சம்பவம் குறித்து வந்த புகாரையடுத்து மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில் அங்கு விரைந்து சென்ற திருச்சுழி உணவு பாதுகாப்பு அலுவலர் வீரமுத்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுகள் மேற்கொண்டதில் சுகாதார குறைபாடு மற்றும் உணவு தயாரிப்பில் அலட்சியம் காரணமாக நடந்த சம்பவங்கள் அனைத்தும் உண்மையென தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து இயங்கிய உணவகத்தை உடனடியாக மூட உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர். மேலும் விரிவான விசாரணை நடத்தி ஓட்டல் நிறுவனத்தின் மீது தொடர் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.