தொடர் விடுமுறை எதிரொலி- திருச்சியில் இருந்து சென்னை, பெங்களூரு, மும்பைக்கு விமான கட்டணம் உயர்வு
- சென்னையில் இருந்து திருச்சிக்கு தற்போது ரூ.6404 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
- பெங்களூருக்கு திருச்சியில் இருந்து கட்டணமாக தற்போது ரூ.5234 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
கே.கே. நகர்:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், மஸ்கட், ஓமன், துபாய், அபுதாபி, சார்ஜா உள்ளிட்ட நாடுகளுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று உள்நாட்டு விமான சேவைகளாக சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, புதுடெல்லி போன்ற நகரங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சுதந்திர தினம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக விமான கட்டணங்கள் திடீர் உயர்வு ஏற்பட்டுள்ளது. சாதாரண நாட்களில் திருச்சியில் இருந்து சென்னைக்கும் சென்னையில் இருந்து திருச்சிக்கும் விமான கட்டணமாக ரூ.2279 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.6404 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று திருச்சியில் இருந்து ஹைதராபாத்திற்கு சாதாரண நாட்களில் ரூ.3575 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.6205 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து மும்பைக்கு கட்டணமாக ரூ.4826 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.8,134 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதேபோன்று பெங்களூருக்கு திருச்சியில் இருந்து கட்டணமாக ரூ.2275 வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.5234 ஆக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 3 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்த பின்னர் இந்த கட்டண உயர்வு சீராகும் என தெரிகிறது.