வடகாட்டில் ஆட்சியர் அருணா ஆய்வு
- கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை?
- கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த சண்முகம், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியில் கடந்த 5-ந் தேதி முத்துமாரியம்மன் கோவில் தேரோட்ட விழாவினை பார்க்க சென்ற பட்டியல் சமுதாய மக்களை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் நேரடியாக எந்த ஆய்வும் நடத்தவில்லை. உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா, மத்திய மண்டல ஐ.ஜி. ஜோஷி நிர்மல்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.
பின்னர் அரசு வக்கீல்கள் வாதிடுகையில், "பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் சேர்த்து இடைக்கால நிவாரணமாக ரூ.8¾ லட்சம் வழங்கப்பட்டுள்ளது. சேதம் அடைந்த வீடுகளுக்கு, கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் வீடு கட்டி கொடுக்கப்படும். அமைதி பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களும் கோவிலில் வழிபட அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக 21 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என்றனர்.
அதற்கு நீதிபதிகள், கலவரம் நடந்த இடத்துக்கு நேரில் சென்று மாவட்ட ஆட்சியர் ஏன் ஆய்வு நடத்தவில்லை? மாவட்ட ஆட்சியர், எஸ்.பி., வருவாய் துறையினர் அனைவரும் ஒயிர் காலர் வேலைதான் செய்வீர்களா? என கேள்வி எழுப்பினர். பின்னர் சம்பவம் தொடர்பான கேமரா பதிவுகளை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், வடகாடு திருவிழாவில் இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அருணா இன்று ஆய்வு மேற்கொண்டார். மேலும் சம்பந்தப்பட்ட பட்டியலின மக்கள் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டார்.