தமிழ்நாடு செய்திகள்

வருகிற 17-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி வருகை

Published On 2025-08-13 15:05 IST   |   Update On 2025-08-13 15:05:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி தி.மு.க. மாவட்ட சார்பில் நல்லம்பள்ளி சந்தை பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
  • வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.

தருமபுரி:

அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தருமபுரி மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.

இதையொட்டி வருகிற 16-ந் தேதி (சனிக்கிழமை) சேலத்தில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொண்ட பின்பு இரவு தருமபுரிக்கு வருகிறார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தருமபுரி தி.மு.க. மாவட்ட சார்பில் நல்லம்பள்ளி சந்தை பகுதியில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ரோடு ஷோ" நடத்துகிறார். அதைத்தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். அன்று இரவு தருமபுரி சுற்றுலா மாளிகையில் ஓய்வு எடுக்கிறார்.

தொடர்ந்து 17-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுற்றுலா மாளிகையில் இருந்து காலை 9 மணிக்கு ஒட்டப்பட்டி, கற்கஞ்சிபுரம் வழியாக பி.எம்.பி. கலைக்கல்லூரி அருகே அமைந்துள்ள நிகழ்ச்சி நடக்கும் திடல் வரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "ரோடு ஷோ" நடத்துகிறார்.

பின்னர் அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். தொடர்ந்து வேளாண் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பார்வையிடுகிறார்.

அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் காலை 11 மணிக்கு சேலம் விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.

Tags:    

Similar News