நூற்றாண்டு பிறந்தநாள்: எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு முதலமைச்சர் புகழாரம்
- பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று.
- தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-
பசுமைப் புரட்சிக்கு வித்திட்டுப் பசியாற்றிய மானுடநோக்கு கொண்ட அறிவியலாளர் 'பாரத ரத்னா' எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டுப் பிறந்தநாள் இன்று. தமது அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரிலான ஆராய்ச்சி அறக்கட்டளைக்கு நிலம் வழங்கி, குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணனுடன் இணைந்து, அங்குள்ள ஜெ.ஆர்.டி. டாடா சுற்றுச்சூழல் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தும் வைத்தார் அன்றைய முதலமைச்சர் கலைஞர்.
அவரது வழியிலான நமது திராவிடமாடல் அரசும், போரூர் வெட்லேண்ட் பார்க், தஞ்சை ஈச்சங்கோட்டை வேளாண் கல்லூரி ஆகியவற்றுக்குத் எம்.எஸ். சுவாமிநாதனின் பெயரைச் சூட்டியுள்ளதோடு, பயிர்ப் பெருக்கம் மற்றும் மரபியல் பாடங்களில் அதிக மதிப்பெண் பெறும் மாணவருக்கு எம்.எஸ்.சுவாமிநாதனின் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்றும் அறிவித்து அவரது நினைவைப் போற்றி வருகிறோம்.
காலநிலை மாற்றம் உட்பட இன்று நாம் எதிர்கொண்டு வரும் பல சவால்களைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே கணித்து, எச்சரித்த மாபெரும் தொலைநோக்காளரான எம்.எஸ்.சுவாமிநாதனை அடியொற்றி, மேலும் பல மாணவர்கள் சமூகத்துக்குப் பணியாற்ற வேண்டும் என அவரது நூற்றாண்டில் கோரிக்கையாக முன்வைக்கிறேன்!
தந்தையின் பணியையும்-புகழையும் போற்றும் சவுமியா சுவாமிநாதனின் பணி சிறக்கவும் வாழ்த்துகள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.