தமிழ்நாடு செய்திகள்

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

Published On 2025-05-01 12:53 IST   |   Update On 2025-05-01 12:53:00 IST
  • விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.
  • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி காலை 9 மணிக்கு நடைபெறுகிறது.

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் சங்கர நாராயணசாமி கோவில் தென் தமிழகத்தின் மிகவும் புகழ்பெற்ற சிவ தலங்களில் ஒன்று.

இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் சுவாமி, அம்பாள் தினமும் பல்வேறு வாகனங்களில் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா வருவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று சங்கரலிங்க சுவாமி சன்னதி முன்பு அமைந்துள்ள கொடி மரத்தில் காலை 5.40 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று பெருங்கோட்டூரில் அமைந்துள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சுவாமி அம்பாள் ரிஷப வாகனத்தில் இரவு 63 நாயன்மார்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவமும், 7-ந்தேதி (புதன்கிழமை) இரவு சுவாமி, அம்பாள், நடராஜர், முதல் மூவர்கள் சிவப்பு சாத்தி அலங்காரத்திலும், நள்ளிரவில் நடராஜர் வெள்ளை சாத்தி அலங்காரத்திலும், 8-ந்தேதி (வியாழக்கிழமை) காலை நடராஜர் பச்சை சாத்தி அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.

சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 9-ம் திருநாளான 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெறுகிறது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., நகர செயலாளர் பிரகாஷ், அறங்காவலர் குழு உறுப்பினர் முப்பிடாதி, வக்கீல் காளிராஜ், ஜெய குமார், ஜான்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News