கல்யாண வீட்டை கலங்கடித்த சம்பவம்- திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் திடீர் மரணம்
- சந்தியா குடும்பத்தினர் 2 நாட்களுக்கு முன்பு மணமகன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
- உயிரிழந்த சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நகரி அடுத்த சிந்தலபட்டடை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன். இவரது மனைவி வனிதா. இந்த தம்பதியின் மகள் சந்தியா (வயது 21). பி.காம். படித்துள்ளார். தற்போது இவர்கள் திருவள்ளூர் அடுத்த மணவாளநகரில் குடியிருந்து வருகின்றனர்.
சந்தியாவிற்கும், பள்ளிப்பட்டு அருகே உள்ள அத்திமாஞ்சேரி பேட்டை, பாரதி நகரை சேர்ந்த மணி என்பவருக்கும் திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது.
இன்று அத்திமாஞ்சேரி பேட்டை அடுத்த பலிஜகண்டிகை கிராமத்தில் திருமணம் நடக்க இருந்தது. இதற்காக சந்தியா குடும்பத்தினர் 2 நாட்களுக்கு முன்பு மணமகன் வீட்டுக்கு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை சந்தியா குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வரவில்லை. சத்தம் கொடுத்தும் எந்த பதிலும் வரவில்லை. அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது சந்தியா மயங்கி நிலையில் கீழே விழுந்து கிடந்தார்.
அவரை உறவினர்கள் உடனடியாக சிகிச்சைக்காக அத்திமாஞ்சேரி பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு சந்தியாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதை கேட்ட இரு வீட்டாரும் பேரதிர்ச்சியில் உறைந்தனர். உயிரிழந்த சந்தியாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மர்மச்சாவாக வழக்குப்பதிவு செய்த பொதட்டூர்பேட்டை போலீசார் மணப்பெண் விஷம் குடித்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்துக்கு முந்தைய நாள் மணப்பெண் உயிரிழந்த சம்பவம் கல்யாண வீட்டை கலங்கடித்தது.