தமிழ்நாடு செய்திகள்

சென்னையில் 1 லட்சம் தொழிலாளர்களுக்கு தினமும் உணவளிக்கும் அம்மா உணவகம்

Published On 2025-09-19 11:42 IST   |   Update On 2025-09-19 11:42:00 IST
  • மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது.
  • அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது.

சென்னை:

சென்னையில் தற்போது 383 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்த உணவகங்களில் உள்ள பாத்திரங்கள், கிரைண்டர், மிக்ஸி உள்ளிட்ட பெரும்பாலான பொருட்கள் பழுதாகிவிட்டன.

இதனால் உணவு தரமாக தயாரிக்க முடியவில்லை. இதன் காரணமாக விற்பனை குறைந்தது.

இந்த நிலையில் அனைத்து அம்மா உணவகங்களையும் சீர்ப்படுத்த மாநகராட்சி நிதி ஒதுக்கியது. இதையடுத்து புதிதாக பொருட்கள் வாங்கப்பட்டு புதுப்பொலிவு பெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து அம்மா உணவகங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது அம்மா உணவகங்களில் தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் சாப்பிடுகிறார்கள்.

காலை, மதியம், இரவு என 3 வேளையும் சுவையான உணவு தயாரித்து வழங்கப்படுவதால் கூலி தொழிலாளர்கள், ஆட்டோ டிரைவர்கள் அதிகளவில் உணவு அருந்துகிறார்கள்.

மறு சீரமைப்புக்கு முன்பு 65 ஆயிரம் பேர் சாப்பிட்டு வந்த நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை கூடியுள்ளது. இரவில் சப்பாத்தி விற்பனை செய்யப்படுகிறது. இது உடனே விற்று தீர்ந்து விடுகிறது. பெரும்பாலானவர்கள் இரவில் சப்பாத்தி சாப்பிடுவதையே விரும்புகிறார்கள்.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

அம்மா உணவகங்கள் மறு சீரமைப்புக்கு பிறகு விற்பனை அதிகரித்துள்ளது. 30 உணவகங்களில் மட்டும் தான் விற்பனை மிகவும் குறைவாக உள்ளது. அங்கு தினமும் ரூ.200 முதல் ரூ.500 வரை வியாபாரம் நடக்கிறது. குறைந்த அளவில் விற்பனை நடந்தாலும் அதனை மூட வேண்டாம் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கக்கூடிய அளவிற்கு கூட விற்பனை இல்லை. ஆனாலும் தொடர்ந்து நடத்தி வருகிறோம். 3030 பெண்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 2 ஷிப்டு அடிப்படையில் பணி செய்கின்றனர். தினக் கூலியாக அவர்களுக்கு ரூ.325 நிர்ணயிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

மாதத்திற்கு சுமார் 30 லட்சம் பேர் அம்மா உணவகங்களில் சாப்பிடுகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News