அமராவதி அணையில் சரியும் நீர்மட்டம்- குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
- பருவ மழைக்குப் பின்பு அணையின் நீராதாரங்களில் போதிய மழை பெய்யவில்லை.
- கோடை காலத்தை பயன்படுத்தி அணையை முழுமையாக தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 90 அடி கொள்ளளவு கொண்ட அமராவதி அணை உள்ளது. அணைக்கு கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் மழைக்காலங்களில் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதை ஆதாரமாகக் கொண்டு அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியும், சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் கடந்த ஆண்டில் பருவமழை அணைக்கு முழுமையாக கைகொடுத்து உதவியது. இதனால் அணையும் அதன் முழு கொள்ளளவை எட்டியது. ஆனால் பருவ மழைக்குப் பின்பு அணையின் நீராதாரங்களில் போதிய மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளில் நீர்வரத்து குறைந்துள்ளது.
இதன் காரணமாக அணைக்கு வந்து கொண்டுள்ள நீர்வரத்தும் படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால் அணையின் நீர் இருப்பும் 50 அடிக்கு கீழாக சரிந்துள்ளது. கடந்த சில நாட்களாக வாட்டி வதைக்கும் வெப்பத்தின் தாக்குதலே இதற்கு காரணமாகும். ஆனால் இதே நிலை நீடித்தால் அணையின் நீர் இருப்பு அதல பாதாளத்திற்கு செல்வதுடன் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
மேலும் கோடை காலத்தை பயன்படுத்தி அணையை முழுமையாக தூர் வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக முன்கூட்டியே திட்டமிடல் வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இன்று காலை 8 மணி நிலவரப்படி 90 அடி உயரம் கொண்ட அணையில் 48.17 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.
அணைக்கு வினாடிக்கு 21 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 38 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழையும் இல்லாமல் உள்ளதோடு அணையில் இருந்து தண்ணீர் திறப்பால் அதன் நீர்மட்டம் சரிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.