நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: 110 அடியை எட்டிய ஆழியாறு அணை
- அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.
- ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதிகளான வால்பாறை, பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மழையுடன் சூறாவளி காற்றும் வீசுகிறது.
இந்த மழை காரணமாக வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள ஒடைகள், நீர்நிலைகள் அனைத்தும் வேகமாக நிரம்பி வருகின்றன.
பொள்ளாச்சி அடுத்து ஆழியாரில் ஆழியார் அணை உள்ளது. இந்த அணையின் உயரம் 120 அடியாகும். அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரக்கூடிய மழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடியே இருந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி ஆழியார் அணையின் நீர்மட்டம் 110.70 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 1,861 கன அடி நீர்வரத்து உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 161 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக ஆழியாறு அணை விரைவில் தனது முழு கொள்ளளவையும் எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருவதால் ஆழியார் அணையின் மூலமாக பாசன வசதி பெற்று வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆழியார் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து, அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருவதால், ஆழியாறு அணையின் நீர் கொள்ளளவைப் பொறுத்து, கரையோர மக்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.