வைகை அணையில் இருந்து 2000 கன அடி நீர் கூடுதலாக திறப்பு
- வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.88 அடியாக உள்ளது.
- மேகமலை, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள 71 அடி உயரம் உள்ள வைகை அணையின் நீர்மட்டம் வடகிழக்கு பருவமழையால் 70 அடியை கடந்தது. இதன் காரணமாக தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு 3 கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. முதற்கட்டமாக ராமநாதபுரம் மாவட்ட பாசனத்திற்காக 2500 கன அடி நீர் நேற்று திறக்கப்பட்டது. இன்று 2-ம் நாளாக வினாடிக்கு 2000 கன அடி வீதம் 172.80 மி.கன அடி வெளியேற்றப்பட்டு வருகிறது. நாளை 1500 கனஅடி, 4-ம் நாள் 1000 கன அடி, 5-ம் நாள் 222 கன அடி என மொத்தம் 5 நாட்களுக்கு 624 மி.கன அடி நீர் ராமநாதபுரம் மாவட்ட கண்மாய்களுக்கு திறக்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை வழியாக ராமநாதபுரம் செல்லும் என்பதால் கரையோரப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 69.88 அடியாக உள்ளது. வரத்து 2338 கன அடி. திறப்பு 3699 கன அடி. இருப்பு 5796 மி.கன அடி.
சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியில் தொடர்ந்து நீடிப்பதால் அணைக்கு வரும் 139 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாகவும், சண்முகா நதி அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவில் 52.50 அடியிலும் நீடிக்கிறது.
மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுருளி, மேகமலை, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு நீடித்து வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.
கூடலூர், உத்தமபாளையம், தலா 1.8, பெரியகுளம் 4, வீரபாண்டி 6.2, அரண்மனைபுதூர் 1.6, வைகை அணை 1.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.