உயிரிழந்த அண்ணன், தம்பி ஜெயராமன், பலராமன்
80 ஆண்டுகால பாசம்... தம்பி உடல் மீது சரிந்து விழுந்து உயிரிழந்த அண்ணன் - நெகிழ்ச்சி சம்பவம்
- கடந்த 3 ஆண்டுகளாக பலராமன் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருந்து வந்தார்.
- மன வேதனையில் இருந்து வந்த ஜெயராமன் சுமார் 7 மணி நேரம் கழித்து தம்பியின் உடல் அருகே துக்கம் தாங்காமல் உயிரிழந்தார்.
ஒடுகத்தூர்:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கொட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் அண்ணன் தம்பிகள், ஜெயராமன் (வயது85), பலராமன் (80) விவசாவிகளான இவர்களுக்கு தலா 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகவே இவர்களது மனைவிகள் இறந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து 2 பேரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக பலராமன் கால் முறிவு ஏற்பட்டு படுக்கையில் இருந்து வந்தார். அண்ணன் வழக்கம் போல் விவசாயம் செய்து வந்தார். நேற்று பிற்பகல் 1 மணியளவில் பலராமன் இறந்தார்.
இதனையடுத்து அவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
இந்நிலையில் மன வேதனையில் இருந்து வந்த ஜெயராமன் சுமார் 7 மணி நேரம் கழித்து தம்பியின் உடல் அருகே துக்கம் தாங்காமல் உயிரிழந்தார். இதனையடுத்து உயிரிழந்த அண்ணன், தம்பிக்கு ஒரே வீட்டில் வைத்து சடங்குகள் செய்து கொட்டாவூர் சுடுகாட்டில் ஒன்றாக இறுதி சடங்கு செய்தனர்.
அண்ணன், தம்பியாக பிறந்து ஒரே வீட்டில் 80 ஆண்டு காலமாக வளர்ந்து தற்போது ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்திருப்பது அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.