சிறுமுகை அருகே 50 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கின- விவசாயிகள் கவலை
- சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை.
- சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை பேரூராட்சி லிங்காபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் வாழை பயிரிடப்பட்டு விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தற்போது பவானி ஆறு, மாயாறு ஆறு ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்கவே, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டமும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியிலும் நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது. இதனால் பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் உள்ள லிங்காபுரம், காந்தவயல், மொக்கை மேடு, பழைய கூத்தாமண்டி பிரிவு, திம்மராயம்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள வாழை தோட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
50 ஆயிரம் வாழைகள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.