தமிழ்நாடு செய்திகள்

100 ஆண்டுகளை கடந்து நிற்கும் 2,238 அரசு பள்ளிகள்- திருவிழாவாக கொண்டாடும் கல்வித்துறை

Published On 2025-01-22 08:42 IST   |   Update On 2025-01-22 08:42:00 IST
  • திருவல்லிக்கேணியில் உள்ள லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்துள்ளது.
  • பள்ளியில் நூற்றாண்டு திருவிழா அடுத்த மாதம் 3-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

சென்னை:

100 ஆண்டுகள் கடந்து இருக்கும் அரசு பள்ளிகளின் விவரங்களை எடுத்து, அந்த பள்ளிகளில் நூற்றாண்டு திருவிழாவாக அதை கொண்டாட கல்வித்துறை திட்டமிட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி படித்த திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்பட 2,238 அரசு பள்ளிகள் 100 ஆண்டுகளை கடந்து இருக்கின்றன.

இந்த பள்ளிகளில் முன்னாள் மாணவர்கள், பெற்றோர் வாயிலாக நூற்றாண்டு திருவிழா கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் திருக்குவளை (தஞ்சாவூர் மாவட்டம்) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (புதன்கிழமை) துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் நூற்றாண்டு சுடர் ஏற்றி தொடங்கி வைக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் 37 அரசு பள்ளிகளிலும் நூற்றாண்டு சுடர் ஏற்றப்பட்டு, நூற்றாண்டு திருவிழா நாளை (வியாழக்கிழமை) முதல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது.

இது மாவட்ட அளவிலான தொடக்க விழா கொண்டாட்டம் ஆகும். அதன் பின்னர் 100 ஆண்டுகளை கடந்த பள்ளிகள் பள்ளி அளவில் நூற்றாண்டு திருவிழாவை பள்ளியின் ஆண்டுவிழாவோடு முன்னாள் மாணவர்கள், பெற்றோரை இணைத்து கொண்டாடவும் கல்வித்துறை பரிந்துரைத்து இருக்கிறது.

இதற்காக சில வழிகாட்டு நெறிமுறைகளை தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை வகுத்துள்ளது. அதன்படி, விழாக்குழு வாயிலாக பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், உள்ளாட்சி உறுப்பினர்கள், கல்வி அலுவலர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளியை சார்ந்த அனைவருக்கும் நூற்றாண்டு விழா குறித்து தெரியப்படுத்த வேண்டும்.

விழாவில் தற்போது பணிபுரியும் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், முன்னாள் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கவுரவிக்க வேண்டும். மாணவர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த திட்டமிட வேண்டும்.

விழாவை புகைப்படம் மற்றும் வீடியோ வாயிலாக பதிவு செய்து ஆவணப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு உள்ளன.

இதனை தவறாது பின்பற்றி, பள்ளி நூற்றாண்டு திருவிழாவை சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் திருவல்லிக்கேணியில் உள்ள லேடி விலிங்டன் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி 100 ஆண்டுகளை கடந்துள்ளது. இந்த பள்ளியில் நூற்றாண்டு திருவிழா அடுத்த மாதம் 3-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது.

இதற்காக முன்னாள் மாணவர்கள் பலர் அழைக்கப்பட்டு உள்ளனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர்களான பர்வீன் சுல்தானா, பாரதி பாஸ்கர் ஆகியோர் இந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் ஆவார்கள்.

மேலும் சிலர் வெளிநாடுகளில் பணிபுரிவதாகவும், ஒருவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அவர்களை ஒருங்கிணைத்து விழாவை சிறப்பாக கொண்டாடும் முயற்சியில் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

Tags:    

Similar News