தமிழ்நாடு செய்திகள்

வேடசந்தூரில் அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி

Published On 2025-07-11 14:20 IST   |   Update On 2025-07-11 14:20:00 IST
  • சிறுவனால் மேலே வரமுடியாமல் உள்ளே மூழ்கினான்.
  • வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என காயத்ரி தேடினார்.

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி (25). இவர்கள் 2 பேரும் பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சாரா ஸ்ரீ (8) என்ற மகளும், துரைப்பாண்டி (2) என்ற மகனும் உள்ளனர்.

இன்று முனியப்பன் வியாபாரத்திற்காக வெளியில் சென்று விட்டார். வீட்டில் காயத்திரி தனது குழந்தைகளுடன் இருந்து வந்தார். அப்பொழுது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் துரைப்பாண்டி அங்கிருந்த தண்ணீர் நிரப்பி இருந்த அண்டாவிற்குள் தவறி தலைகீழாக விழுந்தான். இதனால் சிறுவனால் மேலே வரமுடியாமல் உள்ளே மூழ்கினான்.

வீட்டு வேலைகளை முடித்து விட்டு தனது குழந்தையை காணவில்லை என காயத்ரி தேடினார். அருகில் உள்ள உறவினர்கள் வீடு உள்பட அனைத்து இடங்களிலும் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் எதேச்சையாக அண்டாவில் பார்த்த பொழுது கால் மட்டும் வெளியே தெரிந்த நிலையில் சிறுவன் இருந்துள்ளான். உடனடியாக அவனை மீட்ட உறவினர்கள் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சிறுவனின் தாய் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News