சேலத்தில் 2 மூதாட்டிகள் கொலை- கல்குவாரி குட்டையில் பிணமாக மீட்பு
- 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர்.
- குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சேலம்:
சேலம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட தூதனூர் பகுதியைச் சேர்ந்தவர் பாவாயி (70) விவசாய கூலி தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் பெரியம்மாள் (75) ஆடுகளை வளர்த்து வாழ்ந்து வந்தார். இவர்கள் 2 பேரும் நேற்று காலை 9 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இதையடுத்து 2 பேரின் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவர்கள் காணவில்லை. இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தூதனூர் பகுதியில் அம்மாசி என்பவருக்கு சொந்தமான கல்குவாரியில் உள்ள தண்ணீர் குட்டையில் காணாமல் போன மூதாட்டிகள் பாவாயி, பெரியம்மாள் ஆகியோர் பிணமாக கிடப்பதாக மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மகுடஞ்சாவடி போலீசார் தீயணைப்பு துறை வீரர்கள் உதவியோடு 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் மூதாட்டிகள் அணிந்திருந்த நகைகள் காணாமல் போனதால் நகைக்காக 2 மூதாட்டிகளையும் மர்ம நபர்கள் கொலை செய்து கல்குவாரி தண்ணீரில் வீசி சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.