தமிழ்நாடு செய்திகள்

மயிலாடியில் 126.2 மி.மீ. மழை - பனிப்பொழிவால் பொதுமக்கள் அவதி

Published On 2025-11-12 10:13 IST   |   Update On 2025-11-12 10:13:00 IST
  • திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது.
  • பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அப்போது சாரல் மழை பெய்து வந்த நிலையில் நேற்று மதியத்துக்கு பிறகு மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.

சுசீந்திரம், சாமிதோப்பு, மயிலாடி பகுதிகளில் மதியம் 2 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக இடைவிடாது கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

மயிலாடியில் அதிகபட்சமாக 126.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. கொட்டாரம், கன்னிமார், ஆரல்வாய்மொழி, பூதப்பாண்டி, முக்கடல், இரணியல், கோழிப்போர்விளை, மாம்பழத்துறையாறு, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை பெய்தது. நாகர்கோவிலில் லேசான சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக்கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டு வருகிறார்கள். பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 43.47 அடியாக இருந்தது. அணைக்கு 266 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68.24 அடியாக இருந்தது. அணைக்கு 268 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 450 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணை நீர்மட்டம் 9.05 அடியாக உள்ளது. அணைக்கு 141 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் இன்று காலையில் கடுமையான பனிப்பொழிவு இருந்தது. பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சிரமப்பட்டனர். நாகர்கோவில், கன்னியாகுமரி பகுதிகளில் பஸ்கள் காலை 7.30 மணி வரை முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றன. இருசக்கர வாகன ஓட்டிகளும் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்களை ஓட்டி சென்றனர்.

Tags:    

Similar News