தமிழ்நாடு

சேலத்தில் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தற்கொலை

Published On 2023-11-02 09:29 GMT   |   Update On 2023-11-02 09:29 GMT
  • விஜய் பாண்டி என்பவரது மீன் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார்.
  • வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தூங்கிய விஜய் அதிகாலையில் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார்.

சேலம்:

சேலம் திருவாகவுண்டனூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மகன் விஜய் (20).

இவர் அந்த பகுதியில் உள்ள பாண்டி என்பவரது மீன் கடையில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நாமக்கல்லில் தனியாக கடை வைக்க முடிவு செய்த விஜய் வேலையை விட்டுவிட்டு 3 நாட்களுக்கு முன்பு நாமக்கல்லுக்கு சென்றார்.

இதையடுத்து விஜயை தொடர்பு கொண்ட பாண்டி மற்றும் அவரது மனைவி ஆகியோர் ஏன் வேலையை விட்டு சென்றாய்? எங்கள் கடையிலேயே வேலை பார்த்திருக்கலாமே என்று கேட்டனர். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விஜய் பாண்டியின் மனைவியை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை செல்போனில் பதிவு செய்த பாண்டி சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார் அவர்களை அழைத்து நேற்று இரவு விசாரணை நடத்தினர்.

இரவு 11 மணி ஆகிவிட்டதால் போலீசார் அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இன்று காலை போலீஸ் நிலையத்திற்கு வருமாறு கூறினர்.

இதையடுத்து வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தூங்கிய விஜய் அதிகாலையில் சேலம் 3 ரோடு பகுதியில் உள்ள தனது அறைக்கு சென்றார். பின்னர் அங்கு சேலையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அறை கதவை தட்டியும் கதவு திறக்காததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு விஜய் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதனர்.

சம்பவம் குறித்து பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் சம்பவம் குறித்து விசாரித்தனர். விஜய்யை இன்றும் விசாரணைக்கு வருமாறு போலீசார் கூறியிருந்ததால் பயந்து போய் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே விஜயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News