காதலிக்க மறுத்த கல்லூரி மாணவியை கன்னத்தில் அறைந்த வாலிபர் கைது
- மாணவி தினமும் கல்லூரிக்கு குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்வது வழக்கம்.
- ரிஷிபன் திடீரென நீ என்னை காதலிக்க மாட்டாயா என்று கூறி மாணவியை கன்னத்தில் அறைந்துள்ளார்.
குளச்சல்:
குளச்சல் அருகே வாணியக்குடி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் (வயது 20) ஒருவர் நாகர்கோவிலில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் தினமும் கல்லூரிக்கு குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பஸ்சில் செல்வது வழக்கம். நேற்று மாணவி குளச்சல் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது பஸ் நிலையத்தில் பரிசுப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ள மிடாலத்தைச் சேர்ந்த ரிஷிபன் (30) என்பவர் மாணவியிடம் சென்று பேசியுள்ளார். திடீரென நீ என்னை காதலிக்க மாட்டாயா என்று கூறி மாணவியை கன்னத்தில் அறைந்துள்ளார். எதிர்பாராத மாணவி நிலைகுலைந்தார்.
இந்த நிலையில் மாணவியின் சீருடையை ரிஷிபன் கிழித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இதையடுத்து ரிஷிபன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார். நடந்த சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் குளச்சல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ரிஷிபன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
விசாரணையில் மாணவியை ரிஷிபன் ஒருதலையாக காதலித்து வந்ததும் மாணவி அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அவரை தாக்கியதும் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.