தமிழ்நாடு

மகளிர் ரூ.1000 திட்டத்துக்கு விண்ணப்பிக்க 36 ஆயிரம் முகாம்கள்- தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

Published On 2023-07-22 08:16 GMT   |   Update On 2023-07-22 09:45 GMT
  • முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது.

சென்னை:

தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை தலைமை செயலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் செந்தில்பாலாஜி நீதிமன்ற காவலில் இருப்பதால் அவரை தவிர மற்ற அமைச்சர்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை உள்பட பல முக்கிய துறைகளுக்கான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்கப்பட்டது. குறிப்பாக ஒரகடத்தில் அமைய இருக்கும் புதிய தொழிற்சாலைக்கு அனுமதி கொடுப்பது பற்றி பேசப்பட்டது.

மேலும் மகளிருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தில் தற்போதைய நிலை தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது. தற்போதைய அரசியல் சூழ்நிலை, மணிப்பூர் விவகாரம், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும் கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அமைச்சரவை கூட்டம் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. கூட்டம் முடிந்ததும் அமைச்சர் தங்கம் தென்னரசு அது தொடர்பான தகவல்களை நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சமூக பாதுகாப்பு திட்டங்கள் மூலம் வழங்கப்படும் ஓய்வூதியங்கள் உயர்த்தப்படுகிறது. முதியோர் மற்றும் ஆதரவற்றோருக்கான மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தி வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முதியோர் மாத உதவித்தொகை ரூ.1000-ல் இருந்து ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது. மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படுகிறது. முதியோர் உதவித்தொகை மூலம் 30 லட்சம் பயனாளிகள் பலன் பெறுவார்கள். இதன் மூலம் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.845.91 கோடி கூடுதல் செலவினம் ஆகும்.

பல்வேறு துறைகளில் உள்ள பயனாளிகளுக்கு இது சென்று சேரும். தொழிலாளர் நல வாரியம், கட்டுமான தொழிலாளர் வாரியம் உள்ளிட்ட துறைகளில் உள்ள பயனாளிகள் பலன் பெறுவார்கள். கைம்பெண் மாத உதவித்தொகை ரூ.1,200 ஆக உயர்த்தப்படுகிறது.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்ட முகாம்கள் சென்னையில் நடந்து வருகிறது. மற்ற இடங்களில் 24-ந்தேதி தொடங்க உள்ளது. இந்த முகாம்கள் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது.

ரேசன் கடைகள் ஒரு அலகுகளாக வைத்துக்கொண்டு முதல் கட்டமாக 21,031 முகாம்கள், 2-வது கட்டமாக 14,194 என 35 ஆயிரத்து 925 முகாம்கள் ஆகஸ்டு மாதத்துக்குள் 3 கட்டங்களாக நடத்தப்படும்.

விண்ணப்பங்கள், டோக்கன் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போது சுமார் 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முகாம்கள் சுமூகமாக நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இதில் அலுவலர்கள், தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மணிப்பூர் விவகாரம் பற்றி அ.தி.மு.க. இதுவரை வாய் திறக்காதது அவர்களின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Tags:    

Similar News