தமிழ்நாடு

நில அபகரிப்பு வழக்கில் குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏற்படுவது ஏன்?- மதுரை ஐகோர்ட்

Published On 2024-01-18 09:36 GMT   |   Update On 2024-01-18 09:36 GMT
  • காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
  • தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

மதுரை:

மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஆனந்தி ஷா என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

தனது இடத்தை அபகரித் துக் கொண்டதாக கூறி நில அபகரிப்பு சட்டத்தின்கீழ் மேற்கு வங்காளத்தை சேர்ந்த விக்ரம் என்பவர் மீது மதுரை குற்றப்பிரிவு காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட விக்ரம் தற்போது தலைமறைவாகி உள்ளார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிந்து ஓராண்டு ஆகியும், இன்னும் விசாரணை நடைபெற்றுக் கொண்டிருப்பதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த வழக்கில் காவல்துறையினர் இறுதி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. மேலும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் இருக்கிறார் என தெரிந்தும் காவல்துறையினர் அவரை மீட்டு வந்து விசாரிக்கவில்லை.

எனவே நில அபகரிப்பு வழக்கை விரைந்து விசாரித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என தனது மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சதி சுகுமார குரூப் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்ரம் தற்போது மேற்கு வங்காளத்தில் மறைந்து உள்ளார் என தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், காவல்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களில் போதுமான தகவல் இல்லை என கூறிய நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மேற்கு வங்காளத்தில் மறைந்துள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

தமிழகத்தில் தலைமறைவு குற்றவாளிகள் குறித்து காவல்துறை ஏன் முன்னணி நாளிதழ்களில் அவர்களது விவரங்களை வெளியிட்டு விளம்பரப்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். மேலும், அண்டை மாநிலமான கேரளத்தில் பிரபலமான முன்னணி நாளிதழ்களில் தினந்தோறும் தலை மறைவு குற்றவாளிகள் குறித்து அந்த மாநில காவல் துறையினர் விளம்பரப்படுத்தி வருகின்றனர். இதனை நாள்தோறும் பார்க்க முடிகிறது.

காவல்துறையின் இது போன்ற நடவடிக்கை குற்றவாளிகளுக்கு உறுதுணையாக பாதுகாப்பது போல் உள்ளது என கூறிய நீதிபதி இந்த வழக்கில் தென்மண்டல காவல்துறை தலைவர், ஐ.ஜி. மற்றும் மதுரை காவல் ஆணையர் ஆகியோர் தானாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டு குற்றவாளிகளை பிடிப்பதில் காலதாமதம் ஏன் என்பது குறித்து விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.

Tags:    

Similar News