தமிழ்நாடு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு வினாடிக்கு 4,674 கன அடியாக அதிகரிப்பு

Published On 2023-09-20 04:25 GMT   |   Update On 2023-09-20 04:25 GMT
  • கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது.
  • கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சேலம்:

காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது.

இதையொட்டி காவிரி மேலாண்மை அவசர கூட்டம் டெல்லியில் உள்ள காவிரி மேலாண்மை ஆணையத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இக்கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரைத்தபடி தமிழ்நாட்டிற்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. இதனால் கர்நாடகா தண்ணீர் திறக்குமா? என்ற எதிர்பார்ப்பு தமிழக விவசாயிகளிடையே எழுந்தது.

ஆனால் கர்நாடக அரசு முறைப்படி 5 ஆயிரம் கன அடி நீர் திறக்கவில்லை. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பு காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட வேண்டும் என கூறியும் தண்ணீர் திறந்து விடவில்லை. தற்போது 2-வது முறையாக தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடக்கோரி உத்தரவிட்டும் கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை.

இந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை 6 ஆயிரத்து 16 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து 2 ஆயிரத்து 674 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 97.08 அடியாக உள்ளது.

கபினி அணைக்கு இன்று காலை நீர்வரத்து 3 ஆயிரத்து 166 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து 2000 கன அடி தண்ணீர் காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று இந்த அணையில் இருந்து 1,663 கன அடி நீர் திறக்கப்பட்டது. இன்று சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 75.97 அடியாக உள்ளது.

2 அணைகளில் இருந்தும் நேற்று தண்ணீர் திறப்பு 3 ஆயிரத்து 834 கன அடியாக இருந்த நிலையில் இன்று காலை 4 ஆயிரத்து 674 கன அடியாக தண்ணீர் திறப்பு அதிகரித்து கர்நாடக அரசு திறந்து விட்டுள்ளது.

இந்த நீர்வரத்தை கர்நாடக-தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டு பகுதியில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News