நீர்மட்டம் 53.53 அடியை எட்டியது: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2238 கனஅடியாக அதிகரிப்பு
- டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
- தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சேலம்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்ததால் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் கடந்த மாதம் 10-ந் தேதியுடன் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 1845 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இதற்கிடையே இரவில் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக இன்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 238 கனஅடியாக அதிகரித்து உள்ளது.
இதே போல் அணையின் நீர்மட்டமும் 53.53 அடியை எட்டியது. தொடர்ந்து அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 9.80 மி.மீ. மழை பெய்தது.