தமிழ்நாடு

சடலத்தின் அருகே வழிபாடு செய்யப்பட்ட இடத்தையும், அங்கு இருந்த கல்லையும் படத்தில் காணலாம்.

பிணமாக கிடந்தவர் நரபலி கொடுக்கப்பட்டாரா?- ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைப்பு

Published On 2023-10-09 11:01 GMT   |   Update On 2023-10-09 11:02 GMT
  • அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.
  • தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி தேவனாபுரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

இந்த தோட்டத்தை நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் குத்தகைக்கு எடுத்து வாழை விவசாயம் செய்து வருகிறார். நேற்று தோட்டத்தில் வேலை பார்க்கும் ஒருவர் வழக்கமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது தோட்டத்தின் ஒரு பகுதியில், எலும்பு கூடுகள் துண்டு துண்டாக கிடந்தன. இதை பார்த்ததும் அதிர்ச்சியான அந்த நபர், சம்பவம் குறித்து காரமடை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.பாலாஜி, காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், மேட்டுப்பாளையம் இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தனர்.

அப்போது தோட்டத்தில் சிதைந்த நிலையில் மனித சடலம் கிடந்தது. கை, கால், தலை மற்றும் உடல் பகுதிகள் அனைத்தும் துண்டு, துண்டாக அழுகிய நிலையில் கிடந்தது.

இதையடுத்து போலீசார் மனித உடலை மீட்டு விசாரித்தனர். மேலும் கோவையில் இருந்து மோப்பநாய் வீராவும் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீரா தோட்டத்தில் இருந்து சிறிது தூரம் விரட்டி சென்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

இது தொடர்பாக தடயவியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து, சம்பவ இடத்தில் கிடைத்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.

இந்த சம்பவம் தொட ர்பாக காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தோட்டத்தில் மீட்கப்பட்ட உடல், மிகவும் சிதைந்த நிலையில் காணப்படுவதால், அது ஆண் உடலா? பெண் உடலா? என்பதை கண்டுபிடிப்பதிலும் போலீசாருக்கு குழப்பமாக உள்ளது.

தொடர்ந்து போலீசார் தோட்டம் முழுவதும் அலசி ஆராய்ந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தூரத்தில் ஒரு கல் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்தன.

அந்த கல்லை சுற்றிலும் விளக்குகளும் வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த கல் முழுவதும் ரத்தக்கறையாகவும் இருந்தது. இதனால் மர்மநபர், யாரையாவது அழைத்து வந்து நரபலி கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. அந்த கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

மேலும் அந்த கல்லில் இருந்த ரத்தம் மனித ரத்தமா? அல்லது கோழியின் ரத்தமா? என்பதை உறுதிபடுத்துவதற்காக, அதில் இருந்த ரத்த மாதிரிகளையும் சேகரித்து ஆய்வுக்காக கோவையில் உள்ள பரிசோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். அதன் முடிவுகள் வந்த பின்னரே நரபலி கொடுக்கப்பட்டதா என்பது தெரியவரும்.

மனித உடல் கிடந்த இடத்தில் காலணி ஒன்றும் கிடந்தது. அதனையும் போலீசார் மீட்டுள்ளனர். அதனை வைத்து விசாரணையாது நடக்கிறது. இதுதவிர அண்மையில் யாராவது காணாமல் போய் உள்ளனரா? என்பதை அறிந்து கொள்வதற்காக கோவை மாவட்டம் முழுவதும் உள்ள போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ள காணாமல் போனவர்களின் தகவல்களை சேகரித்தும் விசாரித்து வருகின்றனர். கோவை மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நீலகிரி, திருப்பூர் பகுதி போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவித்தும் விசாரணை நடந்து வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதற்காக தனிப்ப டையும் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தோட்டத்தில் மனித உடல் மீட்கப்பட்டதும், அங்கு நரபலி கொடுக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்படுவதும் காரமடை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News