தமிழ்நாடு

பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கேட்டு 50 ஆண்டு காலமாக போராடும் கிராம மக்கள்

Published On 2023-08-05 08:21 GMT   |   Update On 2023-08-05 08:21 GMT
  • சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் பவானி ஆற்றில் நீர் வேகம் அதிகமாக இருக்கும்.
  • ஆற்றை நடந்து கடக்கவும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பயணிக்கவும் மட்டுமே பாலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி யூனியன் அம்மாபாளையம் பஞ்சாயத்தில் அம்மாபாளையம், ராக்கனாம்பாளையம், கணேசம் புதூர் ஆகிய 3 கிராமங்களில் 1600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர். இதில் அந்தியூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கிராமமாக அம்மாபாளையம் அமைந்துள்ளது.

இங்கு வசிப்பவர்கள் பெரும்பாலும் விவசாய கூலி தொழிலாளர்கள். பவானி ஆற்றின் மறுகரையாக இருக்கும் கைகாட்டி பிரிவுக்கு பரிசல் மூலம் மட்டுமே செல்ல முடியும். அம்மாபாளையம் கிராமம் ஆற்றின் மறுபக்க கரையில் உள்ளது. அம்மாபாளையத்தில் தொடக்கப்பள்ளி மட்டுமே உள்ளது. அங்கு பயிலும் மாணவ, மாணவிகள் உயர்கல்வி தொடரவும், தொழில் மற்றும் தேவைக்காக வெளியூர் செல்பவர்கள் பரிசல் மூலம் பவானி ஆற்றை கடந்து செல்கிறார்கள். இதற்காக ஆற்றங்கரையில் பரிசல் இயக்கப்பட்டு நபருக்கு ரூ.5 பயண கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த பரிசலில் தான் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், பொதுமக்கள், தொழிலாளர்கள் பயணம் மேற்கொள்கிறார்கள். சாதாரண நாட்களை விட மழைக்காலங்களில் பவானி ஆற்றில் நீர் வேகம் அதிகமாக இருக்கும். இந்த மாதிரி சமயங்களில் பரிசல் செல்லும்போது உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் ஆபத்தான முறையில் சென்று வருகின்றனர்.

மேலும் இப்பகுதி மக்களுக்கு அவசர கால சிகிச்சை மற்றும் கர்ப்பிணி பெண்கள் பரிசல் பயணத்தை நம்பி உள்ளனர். இதற்கு நிரந்தர தீர்வாக பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து போராடி வருகின்றனர். ஆனால் அவர்களின் கோரிக்கை கனவாகவே இருந்து வருகிறது.

வழக்கம்போல் தொடர்ந்து பொதுமக்கள் மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் பரிசலில் பயணம் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

அம்மாபாளையம் மக்கள் பெரும்பாலும் தங்கள் பிழைப்புக்காக வெளியூர் சென்று வருகிறோம்.

இதற்காக பரிசல் பயணத்தையே நாங்கள் நம்பி உள்ளோம். நாங்கள் 50 ஆண்டுகளாக பவானி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டித் தர வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியுள்ளோம். அரசியல் கட்சியினர் இங்கு தேர்தல் சமயத்தில் மட்டுமே ஓட்டு கேட்க வருகின்றனர்.

வாகனங்களில் செல்ல நாங்கள் பாலம் கேட்கவில்லை. ஆற்றை நடந்து கடக்கவும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் பயணிக்க மட்டுமே பாலம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். இதுவரை பல எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்களிடம் மனு கொடுத்தும் பாலம் இன்னும் வரவில்லை.

எங்கள் பிரச்சனைக்கு தீர்வு காணாததால் இதற்கு முன்பு நடந்த 2 முறை நடந்த தேர்தலை புறக்கணித்து உள்ளோம். தற்போது தி.மு.க. அரசு பதவி ஏற்றுள்ளது. எங்களது 50 ஆண்டு கால கனவை அரசு நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News