தமிழ்நாடு செய்திகள்

மாட்டு வண்டியில் சென்ற கிராம மக்கள்.

ஆடி தேரோட்டத்தில் பங்கேற்க பழமை மாறாமல் மாட்டு வண்டிகளில் பயணம் செய்த கிராம மக்கள்

Published On 2022-08-10 11:07 IST   |   Update On 2022-08-10 11:07:00 IST
  • காரைக்குடியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் புறப்பட்ட வேலங்குடி கிராம மக்கள் நேற்று இரவு மேலூரை வந்தடைந்தனர்.
  • மாட்டுவண்டியில் பயணம் செய்து தேரோட்டத்தில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்துவது திருப்தியை தருவதாக தெரிவித்தனர்.

மேலூர்:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கோட்டையூர் அருகே உள்ள வேலங்குடி கிராமத்தினர் ஆண்டுதோறும் அழகர்கோவில் ஆடித்தேரோட்டத்தில் பங்கேற்பதற்காக சுமார் 70 கிலோ மீட்டர் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செய்து கலந்துகொள்வது வழக்கம்.

2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பங்கேற்க முடியாமல் இருந்த இந்த தேரோட்ட நிகழ்ச்சி இந்த ஆண்டு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறும் என தமிழக அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து வருகிற 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.

இதற்காக நேற்று மாலை காரைக்குடியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளில் புறப்பட்ட வேலங்குடி கிராம மக்கள் நேற்று இரவு மேலூரை வந்தடைந்தனர். இன்று நள்ளிரவில் அழகர் கோவிலை சென்றடையும் இவர்கள் நாளையும், நாளை மறுநாளும் கோவிலில் தங்கி இருந்து தேரோட்டத்தில் கலந்து கொள்கிறார்கள். பின்னர் மாட்டு வண்டியிலேயே கிராமத்திற்கு திரும்புகின்றனர்.

தங்களிடம் கார், இருசக்கர வாகனங்கள் இருந்தாலும் பாரம்பரிய முறைப்படி முன்னோர்களின் வழக்கப்படி பழமை மாறாமல் மாட்டுவண்டியில் பயணம் செய்து தேரோட்டத்தில் கலந்துகொண்டு நேர்த்திக்கடனை செலுத்துவது திருப்தியை தருவதாக தெரிவித்தனர்.

துபாய், சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் வேலைக்காக சென்ற போதிலும் தேரோட்ட திருவிழாவில் கட்டாயம் கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர். இந்த ஆண்டு வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த கால்பந்தாட்ட குழு இளைஞர்கள் இணைந்து ரூ.3 லட்சம் செலவில மாட்டு வண்டியை நவீன வசதிகளுடன் தயார் செய்து கொண்டு வந்திருந்தது பார்ப்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Tags:    

Similar News