தமிழ்நாடு

போதை மாத்திரை விற்றதாக கைதான 2 பேரை காணலாம்.

ஆன்லைன் வர்த்தகம் மூலம் இளைஞர்கள், மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் சப்ளை- 2 பேர் கைது

Published On 2023-07-13 07:36 GMT   |   Update On 2023-07-13 07:36 GMT
  • இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
  • முதற்கட்ட விசாரணையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு தரப்படும் மாத்திரையை போதைக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

மதுரை:

மதுரை மாநகர் பெரியார் பேருந்து நிலையம் அருகிலுள்ள அரசு பாலிடெக்னிக் பாலம் கீழ்ப்பகுதியில் சட்ட விரோத செயல்கள் அவ்வப்போது அரங்கேறி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து பல்வேறு புகார்கள் வந்தவண்ணம் இருந்தன.

அதேபோல் மர்ம கும்பலை சேர்ந்த சிலர் மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்று வருவதாகவும் ஜெய்ஹிந்த்புரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அங்கு மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த குமரேசன் (வயது 26), ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்த வீரமனோகர் (37) ஆகியோர் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதை கண்டுபிடித்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 1,890 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூக்கமின்மை பிரச்சினைக்கு தரப்படும் மாத்திரையை போதைக்காக சட்டவிரோதமாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

மருத்துவர்களின் பரிந்துரை மருந்து சீட்டு இல்லாமல் இவ்வகை மாத்திரை மருந்து கடைகளில் வழங்கப்படுவதில்லை என்பதால் 'இந்தியா மார்ட்' எனும் ஆன்லைன் வர்த்தக இணையதளம் மூலம் தொடர்பு கொண்டு மாத்திரைகளை ஆர்டர் செய்து ஆன்லைனில் பெற்றுள்ளனர்.

இதற்கான தொகையினை சம்பந்தப்பட்ட டீலருக்கு கூகுள்பே மூலம் அனுப்பி உள்ளனர். இதனை தொடர்ந்து வாங்கிய மாத்திரைகளை 10 மாத்திரைகள் கொண்ட ஒரு அட்டையை கூடுதல் விலைக்கு விற்று வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து இருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி விற்பனை செய்து வருபவர்கள் குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News