தமிழ்நாடு செய்திகள்

விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை: சாலைகள் வெறிச்சோடின

Published On 2024-05-30 12:05 IST   |   Update On 2024-05-30 12:14:00 IST
  • கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கன்னியாகுமரியில் பிரதமர் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

கன்னியாகுமரி:

கன்னியாகுமரிக்கு இன்று மாலை வரும் பிரதமர் நரேந்திர மோடி, கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் பாறைக்கு தனிப்படகில் செல்கிறார். அங்கு உள்ள தியான மண்டபத்தில் அமர்ந்து அவர் தியானம் செய்கிறார். வருகிற 1-ந்தேதி மாலை வரை 3 நாட்கள் தரையில் அமர்ந்து மோடி தியானத்தில் ஈடுபடுகிறார். இதற்காக அங்கு சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்வதற்கு நேற்று முதலே கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையிலும் விவேகானந்தர் மண்டபத்திற்கு செல்ல சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகளின் முகவரிகளை குறித்து விட்டு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் காலை 10.45 மணி முதல் விவேகானந்தர் மண்டபத்திற்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதைதொடர்ந்து ஏற்கனவே சென்ற சுற்றுலா பயணிகள் அனைவரும் விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து கன்னியாகுமரி படகு தளத்திற்கு அழைத்து வரப்பட்டனர். விவேகானந்தர் மண்டபம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளை விவேகானந்தர் மண்டபத்திற்குள் அனுமதிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். பிரதமர் வருகையை அடுத்து கடற்கரை பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாக இருந்ததால் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேபோல கன்னியாகுமரி கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிப்பதற்கும் எந்த தடையும் பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் விவேகானந்தர் மண்டபத்தை சுற்றி உள்ள கடல் பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டுஉள்ளது. கன்னியாகுமரிக்கு பஸ் போக்குவரத்தும் வழக்கம் போல் இயக்கப்படும். கன்னியாகுமரியில் பிரதமர் செல்லும் இடங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாலை மார்க்கம் மட்டுமின்றி கடல் மார்க்கத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி கடல் பகுதியில் வானில் ஹெலிகாப்டர் சுற்றி வந்த படி உள்ளது.

Tags:    

Similar News