தமிழ்நாடு

30 ஆண்டுகள் கொடுத்த 500 மனுக்களை சுமந்து வந்ததால் ஜமாபந்தியில் பரபரப்பு

Update: 2023-06-01 13:47 GMT
  • தொடர்ந்து மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுதாரர் புகார்
  • நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

மாமல்லபுரம்:

திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. மணமை, வடகடம்பாடி, எச்சூர், கடம்பாடி, குழிப்பாந்தண்டலம், பூஞ்சேரி, எச்சூர் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி மற்றும் திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆகியோரிடம் அளித்தனர்.

அப்போது மணமை ஊராட்சியை சேர்ந்த வீராசாமி என்பவர் 500க்கும் மேற்பட்ட மனுக்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு அளித்தார்.

அந்த மனுவில், மணமை ஊராட்சியில் அரசு நீர்நிலைகள் மற்றும் பக்கிங்காம் கால்வாய் ஆகியவற்றின் ஆக்கிரமிப்பை அகற்றவும், சட்டவிரோதமாக நடத்தப்படும் இறால் பண்ணைகளால் நிலத்தடி நீர் நிலைகள் பாதிப்பதாகவும், அதை தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

30 ஆண்டுகளாக தொடர்ந்து மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இதுவரை தான் கொடுத்த 500க்கும் மேற்பட்ட மனுக்களின் நகல்களை தலையில் சுமந்தவாறு வந்து மனு கொடுத்ததாக வீராசாமி கூறினார். இதனால் கூட்ட அரங்கில் பரபரப்பு காணப்பட்டது.

Tags:    

Similar News