அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஆகாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கைப்பந்து வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்- பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி
- ஆகாஷ் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
- ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேபாளத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கைவண்டுர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ். கைப்பந்து வீரர். இவர் நேபாள நாட்டில் உள்ள போக்ரா நகரத்தில் உள்ள ரங்கசாலா விளையாட்டு மைதானத்தில் நடைப்பெறும் போட்டியில் கலந்து கொள்ள கடந்த 21-ந்தேதி சென்றிருந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நேபாள நாட்டிற்கும் தமிழகத்திற்கும் நடைபெற்ற விளையாட்டில் முதல் சுற்றில் வெற்றி பெற்றதும் ஓய்வு எடுக்க ஆகாஷ் தனது அறைக்கு சென்றார். அப்போது ஆகாஷ் மர்மமான முறையில் திடீரென உயிரிழந்தார்.
இதனை அறிந்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆகாஷ் உடலை தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு அளித்தனர்.
இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேபாளத்தில் இருந்து ஆகாஷ் உடலை கொண்டு வர தமிழக வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஆகாஷின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேபாளத்தில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. பின்னர் கைவண்டுர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு ஆகாசின் உடல் கொண்டு செல்லப்பட்டது.
இன்று காலை பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆகாசின் உடல் வைக்கப்பட்டது. அமைச்சர் சா.மு.நாசர், எம்.எல்.ஏ.க்கள் சந்திரன், ஜோசப் சாமுவேல் ஆகியோர் ஆகாசின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் பொதுமக்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இன்று மதியம் கைவண்டுர் பகுதியில் ஆகாசின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.