தமிழ்நாடு

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் ஆனந்த குளியலிட்டதை காணலாம்

திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி

Published On 2023-12-21 06:00 GMT   |   Update On 2023-12-21 06:00 GMT
  • கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.
  • பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது.

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு, மாம்பழத்துறையாறு, முக்கடல் அணைகள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகின்றன.

தொடர்ந்து அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால் கோதை ஆறு, குழித்துறை தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த 2 நாட்களாக மழை குறைந்ததையடுத்து அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது.

அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து குறைந்ததையடுத்து அணையிலிருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. உபரிநீர் குறைக்கப்பட்டுள்ளதால் ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு குறைய தொடங்கியுள்ளது.

கோதையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் திற்பரப்பு அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு 4 நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது. இன்று காலை சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அருவியில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.

பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 45.46 அடியாக உள்ளது. அணைக்கு 906 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 514 கன அடி உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 75.30 அடியாக உள்ளது. அணைக்கு 724 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 503 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சிற்றார் 1 அணையின் நீர்மட்டம் 16.70 அடியாக உள்ளது. அணைக்கு 120 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 129 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழைக்கு மாவட்டம் முழுவதும் ஏற்கனவே 50 வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று மேலும் அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் 12 வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. சேதமடைந்த வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதேபோல் சேதம் அடைந்த விளைநிலங்கள் கணக்கெடுப்பு பணியும் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் ஏற்கனவே வீசிய சூறைகாற்றிற்கு 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைகளும் முறிந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நாகர்கோவில் நகர பகுதியில் ஏற்கனவே மீனாட்சி கார்டன் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்த தண்ணீர் ஓரளவு வடிந்துள்ளது. இதையடுத்து பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பி வருகிறார்கள். அந்த பகுதியில் நோய் பரவலை தடுக்கும் வகையில் மாநகராட்சி சார்பில் புகை மருந்து அடிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் பிளீச்சிங் பவுடர்களும் தூவப்பட்டு வருகிறது.

Tags:    

Similar News