தமிழ்நாடு

உடன்குடி அருகே கிராம அதிகாரியை முற்றுகையிட்டு சிறை பிடித்த கிராம மக்கள்

Published On 2023-12-21 05:24 GMT   |   Update On 2023-12-21 05:24 GMT
  • தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.
  • தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

உடன்குடி:

உடன்குடியில் இருந்து மெஞ்ஞானபுரம் செல்லும் மெயின்ரோட்டில் 100-க்கும் மேற்பட்ட பரப்பளவில் சடையனேரி குளம் உள்ளது.

இந்த குளம் சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் நீர் ஆதாரமாக இருந்து வருகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழை வெள்ளத்தினால் குளம் உடைந்து விவசாய தோட்டங்கள் மற்றும் அடப்பநல்லூர், செட்டியா பத்து, கூழையன் குண்டு, அருணாச்சலபுரம், தண்டு பத்து, அரசூர்பேட்டை, வெள்ளாளன்விளை, வட்டன்விளை, செட்டி விளை, பரமன்குறிச்சி ஆகிய பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது.

இதனால் இந்த வீடுகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று தொடர்ந்து வெள்ள நீர் உயர்ந்து கொண்டே இருந்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் கிராம அதிகாரி கணேச பெருமாள் நேரில் பார்வையிட சென்ற போது வெள்ளாளன்விளை பொது மக்கள் சிறை பிடித்தனர். தங்களுக்கு உரிய நிவாரணம் வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பின்னர் திருச்செந்தூர் தாசில்தார் வாமனன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து விரைவில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதால் கலைந்து சென்றனர்.

தொடர்ந்து உடைந்த சடையனேரி குளத்தில் இருந்து அதிக அளவு தண்ணீர் வெளியேறி வருவதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அதிக அளவு பாதிக்கப்படும் நிலை உள்ளது இன்று காலை வரை தண்ணீர் வடியாமல் ஏராளமான கிராமங்களில் மக்கள் பரிதவிக்கின்றனர். 

Tags:    

Similar News