சிறை அதிகாரி குடும்பத்தினரை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொல்ல முயற்சி- மர்மகும்பல் தப்பி ஓட்டம்
- சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான பல்வேறு குற்றத்தில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
- சமையலறையில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் யாரோ தீ வைத்த காரணமாக சமையலறை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது.
கடலூர்:
கடலூர் கேப்பர் மலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் நூற்றுக்கணக்கான பல்வேறு குற்றத்தில் ஈடுபட்ட கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு உதவி ஜெயிலராக மணிகண்டன் (வயது 35) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சாவூருக்கு சென்றார். இவரது மனைவி பவ்யா, இரண்டு மகன்கள் மற்றும் தாய் தந்தை என 5 பேர் வீட்டில் இருந்து வந்தனர்.
இன்று அதிகாலை திடீரென்று மற்றொரு அறையில் இருந்து எரிந்த வாடை வீசியதால் பவ்யா சந்தேகம் அடைந்து அறையில் இருந்து வெளியில் வந்து பார்த்தார். அப்போது சமையலறையில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் யாரோ தீ வைத்த காரணமாக சமையலறை முழுவதும் எரிந்து கொண்டிருந்தது.
அதிர்ச்சி அடைந்த பவ்யா அலறடித்து கட்டிக் கொண்டு தனது குடும்பத்தை சேர்ந்த நபர்களை பாதுகாப்பாக வெளியேற்றினார்.அந்த அறையில் இருந்த கியாஸ் சிலிண்டர்களையும் அப்புறப்படுத்தினர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். உடனடியாக எரிந்து கொண்டிருந்த தீயை அனைத்தனர்.
இது குறித்து கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
தகவல் அறிந்த சிறைத்துறை சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் சிறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து வீட்டினை சுற்றி பார்த்த போது 2 பாட்டிலில் சிறிது அளவு பெட்ரோல் இருந்தது தெரியவந்தது. மேலும் யாரோ மர்ம நபர்கள் சமையல் அறையில் பெட்ரோல் ஊற்றி உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் குடும்பத்தினரை தீ வைத்து எரித்து கொல்வதற்கு முயற்சி செய்த சம்பவம் தெரிய வந்தது.
கடலூர் மத்திய சிறைச்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உதவி ஜெயிலர் மணிகண்டன் தலைமையில் சிறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு சில முக்கிய குற்றவாளிகளிடமிருந்து செல்போன், சார்ஜர் போன்றவற்றை பறிமுதல் செய்தனர். அப்போது மணிகண்டன் சிறை கைதிகளை கடுமையாக எச்சரிக்கை செய்தார். இந்த முன்விரோதத்தில் சிறை கைதிகள் ஏதேனும் தங்களது ஆட்களை ஏவி உதவி ஜெயிலர் மணிகண்டன் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சினிமா பாணியில் எந்தவித தடயமும் இல்லாமல் சமையலறையில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்தால் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டமாகி கொலை செய்து விடலாம் என்ற நோக்கத்தில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் உதவி ஜெயிலர் மணிகண்டனுக்கும், கைதிகளுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்ததா? என்பதனை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் இது மட்டும் இன்றி இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்கள்? யார் இவர்களை ஏவி விட்டனர்? என்பதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.