தமிழ்நாடு செய்திகள்

கைதான யூடியூபர் டி.டி.எப். வாசன், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி

Published On 2023-09-20 13:28 IST   |   Update On 2023-09-20 13:30:00 IST
  • டி.டி.எப்.வாசன், தனக்கு கைஎலும்பு முறிவு ஏற்பட்ட இடம் மற்றும் இடுப்பு பகுதியில் அதிகம் வலி எடுப்பதாக கூறியதாக தெரிகிறது.
  • சிகிச்சை முடிந்ததும் டி.டி.எப்.வாசன் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

ராயபுரம்:

பிரபல யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் கடந்த 17-ந்தேதி காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டிசத்திரம் பகுதியில் சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக சென்றபோது வீலிங் செய்தார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது வலது கை முறிந்தது. அவரது மோட்டார் சைக்கிள் பல அடிதூரத்துக்கு பறந்து போய் விழுந்தது.

இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவியதை தொடர்ந்து டி.டி.எப். வாசனை நேற்று காலை பாலுசெட்டிசத்திரம் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், மரணம் விளைவிக்கும் வகையில் குற்றம் செய்தல், மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட டி.டி.எப்.வாசனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதற்கிடையே டி.டி.எப்.வாசன், தனக்கு கைஎலும்பு முறிவு ஏற்பட்ட இடம் மற்றும் இடுப்பு பகுதியில் அதிகம் வலி எடுப்பதாக கூறியதாக தெரிகிறது. இதையடுத்து நேற்று இரவு டி.டி.எப்.வாசனை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து வந்தனர்.

அங்கு அவருக்கு பரிசோதனைகள் எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து அவர் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். சிகிச்சை முடிந்ததும் அவர் புழல் சிறையில் அடைக்கப்படுவார் என்று தெரிகிறது.

Tags:    

Similar News