தமிழ்நாடு

சென்னை விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்- சகோதரியை சிக்க வைக்க திட்டமிட்டவர் கைது

Published On 2022-08-27 06:39 GMT   |   Update On 2022-08-27 06:39 GMT
  • துபாய் விமானத்தில் பயணம் செய்வதற்கு கணவர்-குழந்தையுடன் தயாராக இருந்த பெண்ணின் சகோதரரே விமானத்துக்கு மிரட்டல் விடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
  • வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அந்த நபருக்கும், அவரது சகோதரிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது.

ஆலந்தூர்:

சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு துபாய் செல்லும் இண்டிகோ விமானம் புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அதில் 174 பயணிகள் அமர்ந்திருந்தனர்.

இந்த நிலையில் காலை 6.30 மணி அளவில் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம போன் ஒன்று வந்தது.

அதில் பேசிய நபர் இன்று காலை துபாய் செல்ல உள்ள இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் என்றும் கூறினார்.

இந்த விமானத்தில் பயணம் செய்யும் பெண் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவருடன் கணவரும், குழந்தையும் பயணம் செய்கிறார்கள்.

அவர்கள்தான் வெடிகுண்டை தங்களது பையில் எடுத்து செல்கிறார்கள் என்றும் அந்த நபர் தெரிவித்தார். இதைக் கேட்டு கட்டுப்பாட்டு அறை போலீசார் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுப்பற்றி உடனடியாக விமான நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து விமான நிலைய அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். விமான நிலையம் முழுவதும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பு பற்றிக் கொண்டது.

குண்டு வைக்கப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்ட இண்டிகோ விமானத்தில் பாதுகாப்பு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர்.

விமான நிலையத்தின் மற்ற பகுதிகளிலும் உஷார்படுத்தப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. பயணிகள் கொண்டு சென்ற உடைமைகளும் தீவிரமாக பரிசோதனைக்குட்படுத்தப்பட்டன.

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் குறிப்பிட்டிருந்த பெண் மற்றும் அவருடன் பயணம் செல்வதற்கு தயாராக இருந்த கணவர், குழந்தை ஆகிய 3 பேரையும் பிடித்து விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போதுதான் மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது.

துபாய் விமானத்தில் பயணம் செய்வதற்கு கணவர்-குழந்தையுடன் தயாராக இருந்த பெண்ணின் சகோதரரே விமானத்துக்கு மிரட்டல் விடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அந்த நபருக்கும், அவரது சகோதரிக்கும் இடையே பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் அவரை சிக்க வைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் வாலிபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகே அதிகாரிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதை தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் சிக்கினார்.

அவரது பெயர் ரஞ்சித் என்பது தெரியவந்ததது. போலீசார் ரஞ்சித்தை கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணைக்கு பின்னர் அவரை சிறையில் அடைக்க உள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக காலை 7.45 மணிக்கு புறப்பட்டு செல்ல வேண்டிய விமானம் தாமதமாக காலை 11 மணிக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அனைத்து பயணிகளும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். மிரட்டல் விடுத்த வாலிபரின் சகோதரியும் அதே விமானத்தில் கணவர், குழந்தையுடன் துபாய் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News