தமிழ்நாடு செய்திகள்

மழை வேண்டி வழிபட்ட பெண்கள்- வேண்டுதல் நிறைவேறியதால் மக்கள் மகிழ்ச்சி

Published On 2023-10-30 15:44 IST   |   Update On 2023-10-30 15:44:00 IST
  • கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள சந்தி என்று அழைக்கப்படும் சாமிக்கு விளக்கேற்றினர்.
  • வழிபாடு செய்தால் நிச்சயமாக மழை பெய்யும் என்பது நம்பிக்கை.

திட்டக்குடி:

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த வாகையூர் கிராமத்தில் மழை இல்லாமல் விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள சம்பா நெல் மற்றும் சோளம் ஆகிய பயிர்கள் கருகி முற்றிலும் பாழாகி வருகின்றன.

மழை பெய்தால் மட்டுமே பயிர் செய்ய முடியும் என்ற சூழலில் வாகையூர் கிராமத்தை சேர்ந்த பெண்கள் நேற்று நள்ளிரவு ஒன்று திரண்டனர். அவர்கள் கிராமத்தின் மையப் பகுதியில் உள்ள சந்தி என்று அழைக்கப்படும் சாமிக்கு விளக்கேற்றினர். பின்னர் பூ மாலை அணிவித்து, அதன் முன்பு அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுதனர்.

அதன் பின்னர் வீடு வீடாக சென்று சமைத்த உணவுகளை பிச்சை எடுத்தனர். அவற்றை சந்தி சாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். இது போன்ற நிகழ்வுகள் கிராமப்புறங்களில் பஞ்சம் ஏற்படும் போது நமது முன்னோர்களால் நடத்தப்பட்டது. திட்டக்குடி பகுதியில் இது போன்ற நிகழ்வு 100 ஆண்டிற்கு முன்பு நடந்ததாக தங்களின் பெற்றோர்கள் கூறியதாக ஊரில் இருந்த வயதானவர்கள் கூறினர்.

மேலும், இது போன்ற வழிபாடு செய்தால் நிச்சயமாக மழை பெய்யும் என்பது நம்பிக்கை. அதன்படி நள்ளிரவு வழிபாடு முடிந்தவுடன் 2 மணி நேரம் கழித்து இன்று அதிகாலை முதல் திட்டக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர்.

Tags:    

Similar News