தமிழ்நாடு

இந்திய நாட்டை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்தில் இருந்து எழுத தொடங்குகிறோம்- திருமாவளவன்

Published On 2024-04-19 07:25 GMT   |   Update On 2024-04-19 07:25 GMT
  • ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.
  • நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

செந்துறை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினை பதிவு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த பொது தேர்தல் 2 கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல்.

சங்பரிவாருக்கும் நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம் இந்த பொது தேர்தல். இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம்.

இந்தியா கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம். அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விளிம்பியங்களை சிதைக்க துடிக்கிற சங்க பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

ஜனநாயகத்தையும் அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது. நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

கூட்டணி பலம், இன்னொரு புறம் திமுக அரசின் மூன்றாண்டு கால நலத்திட்டங்கள், மூன்றாவதாக இந்தியா கூட்டணி முன்வைக்கக்கூடிய நாட்டு பாதுகாப்பு ஜனநாயக பாதுகாப்பு என்கிற கருத்தியல் பலம் ஆக இந்த 3 பலங்களுடன் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம்.

எனவே பாண்டிச்சேரி உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும். இந்த தேசத்தை காப்பதற்கான தீர்ப்பை தமிழகத்திலிருந்து எழுத தொடங்குகிறோம் என்பதை அறிவிப்பதற்கான நாள்தான் இன்றைய வாக்குப்பதிவு நாள்.

தமிழக மக்கள் தி.மு.க. கூட்டணியின் பக்கம் இருக்கிறார்கள். எனவே ஜனநாயகம் பாதுகாக்கப்படும். அரசியல் அமைப்பு சட்டம் பாதுகாக்கப்படும். டெல்லியில் பாசிச பா.ஜ.க. அரசு தூக்கி எறியப்படும். இந்திய கூட்டணியின் ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

தேர்தல் ஆணையம் நேர்மையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியான பாஜக அரசுக்கு சாதகமாக செயல்படுவதாக அனைத்து தரப்பு மக்களாலும் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அந்த ஆட்சியே தொடரும் என்ற எண்ணத்தில் அவர்கள் அவ்வாறு செயல்படலாம்.

அது தவறு. தேர்தல் ஆணையம் இந்த நாளிலிருந்து நடுநிலைமையோடு ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும். ஒரு சார்பு இல்லாமல் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் 20 பேர் களத்தில் உள்ளனர். அவர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News