சாமி கும்பிட்ட திருடன்
ஸ்ரீபெரும்புதூர் அருகே ரூ.1.08 லட்சம் கொள்ளை: கடையில் திருடும் முன்பு சாமி கும்பிட்ட திருடன்
- திருடன் சாமி படங்களை வணங்கினான். கடையின் சுவற்றில் மாட்டப்ட்டிருந்த அனைத்து சாமி படங்களின் முன்பும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான்.
- கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய போது அவன் செல்போனிலும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான்.
தாங்கள் செய்யும் காரியம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு வரும் சாமி கும்பிடுவது வழக்கம். ஆனால் திருடன் ஒருவன் தான் திருடுவதற்கு முன்பு சாமி கும்பிட்டு விட்டு திருட்டை அரங்கேற்றிய சம்பவம் அங்கு சுங்குவார் சத்திரத்தில் நடந்துள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள சுங்குவார்சத்திரம் வாலாஜாபாத் சாலையில் ராஜ்குமார் என்பவர் ஹார்டுவேர் கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று காலை கடையை திறக்க வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
கடைக்குள் சென்று பார்த்த போது கல்லா பெட்டியில் இருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தார். அந்த காட்சிகள் அவருக்கு அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது. நள்ளிரவு 12.30 மணியளவில் வெள்ளை சட்டை அணிந்த திருடன் ஒருவன் ஹார்டுவேர் கடையின் பின்புற கதவை உடைத்து உள்ளே நுழைந்தான்.
அவன் பணம் இருக்கும் கல்லாப் பெட்டியை தேடினான். அதற்கு முன்பு அவனது கண்ணில் கடையில் இருந்த சாமி படங்கள் தென்பட்டது. இதையடுத்து அந்த திருடன் சாமி படங்களை வணங்கினான். கடையின் சுவற்றில் மாட்டப்ட்டிருந்த அனைத்து சாமி படங்களின் முன்பும் நீண்ட நேரம் பிரார்த்தனை செய்தான். அதன்பிறகு அவன் கல்லாபெட்டியை திறந்து அதில் இருந்த ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றான்.
கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றிய போது அவன் செல்போனிலும் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தான். இது தொடர்பாக கடை உரிமையாளர் ராஜ்குமார் போலீசில் சுங்குவார்சத்திரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோ காட்சிகளை வைத்து திருடனை தேடி வருகிறார்கள். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.