தமிழ்நாடு

மாணவி சத்யா கொலையில் வீடியோ ஆதாரங்கள் சிக்கின- சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை தீவிரம்

Published On 2022-10-16 05:18 GMT   |   Update On 2022-10-16 05:18 GMT
  • 4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சென்னை:

சென்னை ஆலந்தூரை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யா ரெயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு இன்னும் அடங்காமலேயே உள்ளது.

பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நடைபெற்ற இந்த கொடூர கொலை சம்பவம் தொடர்பாக மாம்பலம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் வைரவன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். கடந்த 13-ந்தேதி மதியம் மாணவி சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்துவிட்டு தப்பிய கொடூர கொலையாளி சதீசை ரெயில்வே போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி துரைப்பாக்கத்தில் வைத்து அதிரடியாக கைது செய்தனர்.

சதீசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை ரெயில்வே போலீசிடமிருந்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது.

போலீஸ் சூப்பிரண்டு ஜியா உல் ஹக் தலைமையிலான போலீசார் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். டி.எஸ்.பி. புருஷோத்தமன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

4 தனிப்படையினர் மாணவி கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவி சத்யா கொலை வழக்கை எவ்வளவு சீக்கிரம் நடத்தி முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விரைவாக நடத்தி முடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும் போது, இதுபோன்ற முக்கியமான வழக்குகளை 3 மாதத்தில் முடிப்பதற்கு எப்போதுமே திட்டமிடுவோம்.

அந்த வகையில் சத்யா கொலை வழக்கும் 3 மாதத்தில் நடத்தி முடிக்கப்படும். இந்த வழக்கில் கொலையாளி சதீசுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவோம் என்று தெரிவித்தார்.

மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட பரங்கிமலை ரெயில் நிலையத்தில் சம்பவம் நடைபெற்ற பகுதியில் 2 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. மெட்ரோ ரெயில் நிலைய பகுதியிலும் கொலை சம்பவம் நடந்த இடம் நோக்கி கேமரா ஒன்று பொருத்தப்பட்டிருந்தது. இந்த 3 கேமராக்களில் பதிவான காட்சிகளையும் ரெயில்வே போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளும் இந்த வீடியோ காட்சிகளை போட்டு பார்த்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகளில் மாணவி சத்யா, கொலையாளி சதீஷ் ஆகியோர் ரெயில் நிலையத்துக்குள் வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

ஒரு கண்காணிப்பு கேமராவில் மாணவி சத்யாவை சதீஷ் ரெயிலில் தள்ளி விடும் காட்சியும் பதிவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொலை சம்பவம் நடந்தபோது ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்துள்ளனர். சதீஷ், சத்யாவை பின் தொடர்ந்து சென்றது முதல், கொலை செய்தது வரை இந்த வழக்குக்கு தேவையான அனைத்து முக்கிய ஆதாரங்களையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முழுமையாக திரட்டி வைத்துள்ளனர்.

இந்த வழக்கில் மாம்பலம் ரெயில்வே போலீசார் நடத்திய விசாரணை நேற்று காலையுடன் முடிவடைந்தது. இதையடுத்து வழக்கு தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும், ரெயில்வே போலீசார், சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதனை வைத்து அடுத்தகட்ட விசாரணையில் தீவிரம் காட்டியுள்ளனர்.

மாணவி கொலையில் ரெயில் நிலையத்தில் நின்றிருந்த பயணிகள் பலரை இந்த வழக்கில் முக்கிய சாட்சிகளாக போலீசார் சேர்த்துள்ளனர். அவர்களிடமும் விசாரணை தொடங்கியுள்ளது. இந்த சாட்சிகள் தெரிவிக்கும் தகவல்கள் வாக்குமூலமாக பதிவு செய்யப்பட்டு வீடியோவும் எடுக்கப்படுகிறது. மாணவிக்கு சதீஷ் தொடர்ச்சியாக கொடுத்த தொந்தரவுகள் பற்றியும் போலீசார் விரிவான விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் கிடைத்த தகவல்களும் வழக்கில் முக்கிய ஆதாரங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. இப்படி மாணவி சத்யா கொலையில் கொலையாளி சதீசுக்கு எதிராக அனைத்து வலுவான ஆதாரங்களும் கிடைத்திருப்பதால் உச்சப்பட்ச தண்டனையில் இருந்து சதீஷ் தப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News