தமிழ்நாடு

மதுரை ரெயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.


வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு 45 வயது: மதுரையில் கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்

Published On 2022-08-15 07:31 GMT   |   Update On 2022-08-15 07:31 GMT
  • இந்தியாவின் அதிவிரைவு ரெயில் என்ற பெருமையை பெற்றது.
  • மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் என்று வர்ணிக்கப்படும் இந்த ரெயில்.

மதுரை:

சென்னை-மதுரை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந் தேதி அறிமுகம் ஆனது. அப்போது மீட்டர் கேஜ் பாதையில் மணிக்கு 105 கி.மீ. வேகத்தில் சென்று, 'இந்தியாவின் அதிவிரைவு ரெயில்' என்ற பெருமையை பெற்றது.

'மதுரை கோட்டத்தில் முதல் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ்' என்று வர்ணிக்கப்படும் இந்த ரெயில், ஆசியாவிலேயே மீட்டர் கேஜ் பாதையில், அதிவேகமாக இயக்கப்பட்ட ரெயிலும் ஆகும். மதுரையில் இருந்து தினமும் காலை 7.10 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு மதியம் 2.35 மணிக்கு சென்று வருகிறது. மறு மார்க்கத்தில் சென்னையில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 9.15 மணிக்கு மதுரை வரும்.

இந்தியாவிலேயே முதன் முறையாக மீட்டர்கேஜில் குளிர்சாதன வசதி அறிமுகப்படுத்தப்பட்டது, வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் தான். இதில் நாள்தோறும் சென்னை-மதுரை, மதுரை-சென்னை இரு மார்க்கங்களிலும் சுமார் 5 ஆயிரம் பேர் பயணம் செல்கின்றனர்.

ஒருவழிப் பயண தூரம் 497 கி.மீ. ஆகும். ஆண்டுக்கு 3 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரம் வைகை எக்ஸ்பிரஸ் பயணம் செய்கிறது. இதுவரை 1 கோடியே 73 லட்சத்து 65 ஆயிரம் கி.மீ. தூரத்துக்கு பயணம் செய்துள்ளது. தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக திகழும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு இன்று 45-வது பிறந்தநாள். இதையொட்டி மதுைர ரெயில் நிலையத்தில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாடினர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு சிறப்பு பூஜை நடத்தது. ரெயில் என்ஜின் பைலட்டுக்கு சந்தன மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற என்ஜின் டிரைவர் அய்யலு கூறுகையில், "இன்றைக்கு நவீன வசதிகளோடு, வைகை மதுரை-சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் பயணம் செய்கிறது. இதில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. வைகை எக்ஸ்பிரஸில் பணியாற்றியது எங்களைப்போன்ற என்ஜின் டிரைவர்களுக்கு பெருமை தரக் கூடியதாக இருந்தது என்றார்.

Tags:    

Similar News