தமிழ்நாடு செய்திகள்

விடுமுறையையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்- படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

Published On 2023-08-27 12:36 IST   |   Update On 2023-08-27 12:36:00 IST
  • சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.
  • சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏற்காடு:

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றான சேலம் மாவட்டம் ஏற்காடு சேர்வராயன் மலைத்தொடரில் உள்ள மலைத்தளமாகும். இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர் உயரத்தில் உள்ளது. மிகவும் சிக்கனமான மலைவாச தலமாகும். எனவே இது ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படுகிறது.

ஏற்காட்டில் வானுயர்ந்த மரங்கள், காபி செடிகள், அரிய வகை தாவரங்கள், உள்ளன. இங்கு கிளியூர் நீர்வீழ்ச்சி, பூங்கா, ஏரி என பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதை காண தினமும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். குறிப்பாக விடுமுறை தினம் மற்றும் வாரத்தின் இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம்.

இந்த நிலையில் விடுமுறை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். தற்போது வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

ஏற்காடு அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், தாவரவியல் பூங்கா, கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய பகுதிகளுக்கு சென்று சுற்றி பார்த்து மகிழ்ந்தனர். பூங்காவில் உள்ள சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல் உள்ளிட்டவைகளில் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் விளையாடினார்கள்.

மேலும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்ய படகு இல்லத்தில் குவிந்தனர். அங்கு மிதி படகு, மோட்டார் படகு, துடுப்பு படகில் சென்றவாறு சிலு சிலு காற்றுடன் இயற்கை காட்சிகளை ரசித்தனர். சுற்றுலா பயணிகள் அழகு சாதன பொருட்கள், அழகு செடிகள் உள்ளிட்டவைகளும் வாங்கிச் சென்றனர்.

விடுமுைற தினத்தையொட்டி இன்று சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்ததால் அங்குள்ள கடைகளில் விற்பனை களை கட்டியது.

Similar News