தமிழ்நாடு செய்திகள்

10 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்- திருமாவளவன்

Published On 2022-11-20 13:36 IST   |   Update On 2022-11-20 13:36:00 IST
  • 10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிற செயல்.
  • 10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

வேலூர்:

வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேலூர் கஸ்பா கன்சால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடங்களில் வசிப்பவர்களை காலி செய்ய ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அவர்களின் வாழ்வாதாரத்தை கருதி இந்த நடவடிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சிஎம்சி நிர்வாகம் தற்போதுள்ள மருத்துவமனையில் இருந்து ராணிப்பேட்டையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவமனைக்கு இருதய அறுவை சிகிச்சை பிரிவை மாற்றும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதனால் இங்குள்ள ஏழை எளியவர்கள் பாதிக்கப்படுவார்கள் எனவே புதிய மருத்துவமனையில் புதிதாக இருதய அறுவை சிகிச்சை பிரிவை தொடங்க வேண்டும்.

10 சதவீத இட ஒதுக்கீடு என்பது அரசியல் அமைப்பு சட்டத்தை நீர்த்துப்போக செய்கிற செயல். உயர் வகுப்பில் பின்தங்கிய சமூகமாக இருக்கிற ஏழைகளுக்கு இலவச கல்வி, கல்வி கடனுதவி, தொழில் தொடங்க கடன் உதவி உள்ளிட்டவைகளை அரசு உதவி செய்ய வேண்டுமே தவிர இட ஒதுக்கீடு அளிக்கக்கூடாது.

10 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்.

ராஜீவ் காந்தி கொலையில் 6 பேரை சுப்ரீம் கோர்ட்டு அவர்களின் அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது.

இது சுப்ரீம் கோர்ட்டின் தன்னிச்சையான முடிவு இது வரவேற்க வேண்டிய நிலைப்பாடு. அவர்களின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு செய்துள்ளது. இருப்பினும் அவர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வரும்.

பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள கவர்னர்கள் அந்த மாநில அரசுகளை மதிக்காமல் அரசியல் பேசி வருகின்றனர். இது கண்டிக்கத்தக்கது.

எடப்பாடி பழனிசாமி பா.ஜ.க. நிர்வாகி போல் செயல்படுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News