திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு- சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு அடக்கிய வீரர்கள்
- திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது.
- சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் கண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.
திருமங்கலம்:
திருமங்கலம் அருகே உள்ள கரடிக்கல் கிராமத்தில் சுந்தராஜபெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் பங்கேற்க 750 காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் அனுமதிக்கப்பட்டனர்.
மாடுபிடி வீரர்களுக்காக கரடிக்கல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 5 மருத்துவர்கள், 25பேர் கொண்ட மருத்துவக் குழு மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது. மாடுபிடி வீரர்கள் போதை வஸ்து சாப்பிட்டுள்ளனரா? அவர்களது உடலில் காயம் உள்ளதா? என்பது குறித்து பரிசோதனை செய்த பின்னரே போட்டியில் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடக்கவிழா நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
போட்டிகள் மொத்தம் 10 சுற்றுகளாக நடைபெற்றது. சுற்றுக்கு 50 மாடுபிடி வீரர்கள் வீதம் களம் கண்டனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டிபோட்டு அடக்கினர்.
போட்டியில் பங்கேற்ற அனைத்து காளைகளுக்கும் கட்டில், பீரோ, அண்டா, குத்துவிளக்கு, சைக்கிள், தங்க காசு உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் காயமடைந்தால், அவர்களை மருத்துவ மனைக்கு கொண்டுசெல்ல 5 ஆம்புலன்சுகள் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டி ருந்தது. 2 கால்நடை அவசர ஊர்திகளும் தயாராக இருந்தன.
ஜல்லிக்கட்டு நடந்த பகுதியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவ பிரசாத் மேற்பார்வையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.