தமிழ்நாடு செய்திகள்

மயிலாடுதுறையில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவி அறிவிப்பு

Published On 2022-11-23 10:49 IST   |   Update On 2022-11-23 10:49:00 IST
  • பணம் வழங்குவதற்காக அரசு சார்பில் ரூ.16 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கி வருவாய்த்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
  • நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10, 11 ஆகிய 2 நாட்கள் பெய்த கனமழையாக சீர்காழி தரங்கம்பாடி பகுதிகள் வெள்ளத்கதில் கடுமையாக பாதிக்கப்பட்டது. அங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 14ம் தேதி அங்கு நேரில் சென்று வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார்.

அன்றைய தினமே உடனடியாக சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித்தொகை குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும் என்று அறிவித்தார்.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள 145 ரேசன் கடைகளில் அடங்கிய 99,518 குடும்ப அட்டைதாரர்களும், தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள 94 நியாய விலைக் கடைகளில் 62,129 குடும்ப அட்டைதாரர்களும் என மொத்தம் 239 ரேசன் கடைகளில் உள்ள 1 லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்பங்கள் ரூ.1000 நிவாரண உதவி பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டது.

அதன்படி இவர்களுக்கு பணம் வழங்குவதற்காக அரசு சார்பில் ரூ.16 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கி வருவாய்த்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

எனவே சீர்காழி- தரங்கம்பாடி பகுதியில் வசிக்கும் மக்கள் ரேஷன் கடைகளுக்கு சென்று குடும்ப அட்டையை காண்பித்து ரூ.1000 நிவாரண தொகையை பெற்றுக்கொள்ளலாம்.

நாளை முதல் ரேஷன் கடைகளில் ரூ.1000 பணம் வழங்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் இரா.லலிதா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags:    

Similar News